இப்படி ஒரு சோகம் நிகழ்ந்திருக்க வேண்டாம்... மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்..!

தமிழ் சினிமா ரசிகர்களாலும், திரையுலகினராலும் இயக்குனர் இமயம் என அன்போடு அழைக்கப்படுபவர் பாரதிராஜா. தனது மகன் மனோஜை 'தாஜ்மஹால்' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தார். 'திருப்பாச்சி அரிவாளா' என துடிப்பான கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமான மனோஜ் தொடர்ந்து அப்பாவின் இயக்கத்தில் ஊரநிலம், கடல் பூக்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தொடர்ந்து அல்லி அர்ஜுனா, மகா நடிகன், சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான மாநாடு, விருமன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்து இருந்தார் மனோஜ். சமீபத்தில் தனது தனது தந்தையின் வழியில் இயக்குனர் அவதாரமும் எடுத்தார். சுசீந்திரன் தயாரிப்பில் 'மார்கழி திங்கள்' என்ற படத்தை இயக்கி இருந்தார்.
மனோஜ் இயக்குனராக அறிமுகமான இந்தப்படம் பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார். சமீபத்தில் மனோஜுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டில் ஓய்வில் இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அவரது வீட்டில் இருந்த சமயத்தில் மனோஜுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜின் திடீர் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மகனின் மறைவில் இருந்து பாரதிராஜா எப்படி மீண்டு வரப்போகிறார் என சோகத்துடன் பலரும் கூறி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் மனோஜிற்கு இரங்கல் தெரிவித்து, இயக்குனர் பாரதிராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்து பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் இசைஞானி இளையராஜா, எனது நண்பன் பாரதியின் மகனான மனோஜ் மறைந்த செய்தியை அறிந்து மிகவும் அதிர்ந்து போனேன். என்ன சொல்வது தெரியவில்லை? வார்த்தை வரவில்லை. பாரதிக்கு இப்படி ஒரு சோகம் நிகழ்ந்திருக்க வேண்டாம். நம்மால் தடுக்க முடியாது. மனோஜின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என மனோஜ் பாரதிராஜாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நடிகரும் எனது ஆத்ம நண்பர் இயக்குநர் பாரதிராஜாவின் புதல்வனுமான மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். தனது அருமை மகனை இழந்து வாடும் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான திரு. மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் திரு. மனோஜ் அவர்கள். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ்.இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், தமிழ் இயக்குனரும், குடும்பத்தில் ஒருவர் என நெருக்கமான உறவாக இருக்கும் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் அன்பு மகன் மனோஜ் அவர்கள் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த மனவேதனையளிக்கிறது. சமுத்திரம் திரைப்படத்தில் மனோஜின் மூத்த சகோதரராக நடித்த நாட்களை நினைவுகூறுகிறேன். பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, தனக்கான முத்திரை பதிக்க இறுதி வரை போராடிய இளவலின் மறைவு வாழ்வின் நிலையற்ற நிலையை காட்டுகிறது. பாரதிராஜா அவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற எங்களிடம் வார்த்தைகளில்லை. சுற்றத்தார்க்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் பேரிழப்பை தந்து மறைந்திருக்கும் மனோஜின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என மனோஜ் பாரதிராஜாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மனோஜ் மறைவிற்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி. ராஜேந்தர் இரங்கல்
“இயக்குநர் இமயம், மண்வாசனை இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனார் மனோஜ் அவர்கள் மாரடைப்பால் மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனதை பெரிதும் பாதிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழக ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” – நடிகர் மனோஜ் மறைவிற்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி. ராஜேந்தர் இரங்கல்.
மனோஜ் மறைவிற்கு பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்
”நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகன் திரு. மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.” – தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்.
மனோஜ் மறைவிற்கு செல்வப்பெருந்தகை இரங்கல்
”மனோஜ் பாரதிராஜா அவர்கள் மரணமடைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்” – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல்.
மனோஜ் மறைவிற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனும், திரைப்பட நடிகருமான திரு.மனோஜ் பாரதிராஜா அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன் . அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். மகனை இழந்து ஆற்றொண்ணா துயரில் வாடும் திரு.பாரதிராஜா அவர்கள் இத்துன்பத்தில் இருந்து மீண்டு வரும் வலிமையை அளிக்க இறைவனை வேண்டுவதுடன், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.