மாணவர்கள் இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் !

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு இன்று முதல் (அக்.23) வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் மார்ச் மாத தொடக்கத்தல் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஒருசில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பத்தாம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் இன்று முதல் (அக்.23) பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவர்கள் தங்கள் படித்த பள்ளி மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வுமையம் மூலமும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள், தனித்தேர்வர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும்.
மேலும், தனிநபர் இடைவெளி உள்பட பாதுகாப்பு வழிமுறைகளை அவசியம் பின்பற்றுதல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
newstm.in