கலக்கத்தில் மாணவர்கள்..! ஜூன் 18-ல் நடந்த நெட் தேர்வு அதிரடியாக ரத்து..!

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நடப்பாண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றதாக தகவல் வெளியாகி வருகிறது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, 67 பேர் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது, ஹரியாணா நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் ஒரே மதிப்பெண் பெற்றது, குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என பல்வேறு மோசடிகள் அம்பலமாகி வருகின்றன.
இந்த புகார்கள் தொடர்பாக அந்தந்த மாநிலங்களில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றமும் விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், மோசடிகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க, நேற்று முன்தினம் (ஜூன் 18) நாடு முழுவதும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியருக்கான தகுதித் தேர்வான நெட் தேர்வு (NET Exam) நடைபெற்றது. இதையடுத்து, அந்தத் தேர்விலும் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாக தேசிய சைபர் க்ரைம் பிரிவில் இருந்து, பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு புகார்கள் சென்றன. இதன் அடிப்படையில், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டும், தேர்வின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காகவும் ஜூன் 18-இல் நடந்த நெட் தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்த நெட் தேர்வு மீண்டும் புதிதாக நடத்தப்படும் என அறிவித்துள்ள மத்திய கல்வித்துறை அமைச்சகம், நெட் தேர்வில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.