அதிர்ச்சியில் மாணவர்கள்..! மாணவர்களுக்கான விரைவு விசா திட்டத்தை நிறுத்தியது கனடா..!
கனடாவில் SDS என்ற ‘ஸ்டூடண்ட் டைரக்ட் ஸ்ட்ரீம்’ திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு, கல்லூரி படிப்பை மேற்கொள்ள கனடாவில் விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனை செய்ய உருவாக்கப்பட்ட திட்டம். இந்த திட்டத்தின் மூலமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெற்று வந்தனர். படிப்பதற்காகவும், வேலைக்காவும் வெளிநாட்டினர் அதிகளவில் கனடா வருவதால் அங்கு குடியிருக்க வீடு கிடைப்பது சிரமமாகிவிட்டது. மேலும், அங்கு குடியேறும் மக்களுக்கு இதர வசதிகள் செய்து தருவதிலும் சிக்கல் ஏற்பட்டது. வேலை கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச மாணவர்களுக்கு விரைவு விசா நடைமுறையை கனடா நிறுத்தியுள்ளது.
கனடாவில் கடந்த 6 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த “ஸ்டூடண்ட் டைரக்ட் ஸ்ட்ரீம்” (SDS) மற்றும் NSE விசா திட்டங்களை நவம்பர் 8 ஆம் தேதி 2 மணியுடன் கைவிடுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. கனடா அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இனிவரும் காலத்தில் கனடாவில் படிக்க விரும்பும் மாணவர்களை நேரடியாக தற்போது நடைமுறையில் உள்ள வழக்கமான கல்வி அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும்படி கனடா அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கான படிப்பு அனுமதி விண்ணப்பங்களை சரிபார்க்கும் செயல்முறையை நியாயமாகவும், சமமாகவும் வைத்திருக்க கனடா உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் போது உத்தரவாதம் அளிக்கப்பட்ட முதலீட்டு ஆவணங்களை, மாணவர்களின் தற்போதைய நிதி நிலையை அறிந்து கொள்வதற்கான ஆதாரங்களாக வழங்க வேண்டும் என்றும் கனடா அறிவித்துள்ளது. சர்வதேச நாடுகளில் இருந்து கனடாவில் படிக்க மாணவர்களை தொடர்ந்து வரவேற்போம் என்றும் கனடா கூறியுள்ளது. எஸ்.டி.எஸ் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதன் காரணமாக சர்வதேச மாணவர்கள் கனடாவில் படிக்க விசா பெறுவதற்கு இனி நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
மாணவர்களுக்கான விரைவு விசாவை கனடா அரசு நிறுத்தியுள்ளதால், அங்கு படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தியா – கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதன் காரணமாக சுமூகமான சூழல் இல்லாத நிலையில் மாணவர்களுக்கான விரைவு விசா சேவையை கனடா அரசு திடீரென நிறுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.