பெண்களுக்காக மாணவர் அசத்தல் கண்டுபிடிப்பு..! தொட்டால் ஷாக் அடிக்கும் வாட்ச்..!

பெண்களை தொட்டால் 5 கிலோ வாட் மின்சாரம் பாயும் புதிய கை கடிகாரத்தை டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
சென்னை டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் ராம்கிஷோர் கடந்த 6 ஆண்டுகளாக முயற்சி செய்து, ஆபத்தான சூழ்நிலையில் இருந்து தற்காத்துக்கொள்ளும் நவீன கை கடிகாரத்தை உருவாக்கியுள்ளார். இவர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மெக்கானிக்கல் மற்றும் எம்.டெக் படித்துள்ளார்.
ஐஐடி மெட்ராஸ் எலக்ட்ரானிக்ஸ் சென்ட்ரலில் இந்த கடிகாரத்தின் நம்பகதன்மை சோதனை செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. இதனை, பெண்கள் மட்டுமல்லாமல் வயதானவர்களும் தங்கள் பாதுகாப்பிற்காக அணிந்துக் கொள்ளலாம் என பல்கலைக்கழக துணைவேந்தர் சீதா லட்சுமி தெரிவித்துள்ளார்.
புதிய கை கடிகாரத்தின் அறிமுக விழா லலித்தாம்பிகை மருத்துவக் கல்லூரியில் நேற்று (பிப்ரவரி 13) நடைபெற்றுள்ளது. இதில், டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் கலந்து கொண்டு கை கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து பேசிய அவர், "மக்கள் பயன்பாட்டிற்காக இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கு பல கோடி செலவானாலும் அதனை தமது பல்கலைக்கழகம் செய்வதற்கு தயார் நிலையில் உள்ளது. மேலும், இவற்றை குறைந்த விலையில் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.அதேபோல் இந்த கடிகாரம் குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் சீதாலட்சுமி கூறுகையில், “எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக ARI-Advanced Research Institute பெண்களுக்கான பாதுகாப்பு கை கடிகாரத்தை (Womens Safety Watch) கண்டுபிடித்துள்ளனர். இதனை அனைவரும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக வேலைக்கு சென்று வரும் பெண்களின் பாதுகாப்பை கருதி, இந்த கை கைடிகாரத்தில் மின்சாரம் பாயும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை கையில் கட்டிக்கொண்டு செல்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் எதிரிகளுக்கு 5 கிலோ வாட்டில் மின்சாரம் பாய்ந்து ஒரு சில வினாடிகள் நிலை குலைய வைக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நபர் இருக்கும் இடத்தை உடனடியாக காவல்துறை மற்றும் பெற்றோருக்கு தெரிவித்து விடுகிறது.