ஓசூர் அருகே தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவரும் காப்பாற்ற முயன்ற தலைமையாசிரியரும் உயிரிழப்பு..!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த எழுவப்பள்ளி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 30 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கூஸ்தனப்பள்ளி கிராமத்தில் வசிக்கும், கவுரி சங்கர் ராஜூ, 53, என்பவர் தலைமையாசிரியராக உள்ளார்.
இப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும், எழுவப்பள்ளியை சேர்ந்த மணிகண்டன் மகன் நித்தீன், 8, என்பவர், மதியம், 1:00 மணிக்கு மேல், மதிய உணவு இடைவேளையின் போது, பள்ளியின் பின்புறம் உள்ள வெங்கடேஷ் என்பவரது விவசாய நிலத்திற்கு சென்றார். அங்கு தண்ணீரை சேமித்து வைக்க, பெரிய அளவில் பள்ளம் தோண்டி, அதன் மீது பிரமாண்ட தார்ப்பாயை விரித்து, தண்ணீரை சேமித்து வைத்திருந்தார்.
அந்த தொட்டிக்குள் மாணவன் நித்தீன் தவறி விழுந்தான். இதை பார்த்த பள்ளி மாணவ, மாணவியர் தலைமையாசிரியர் கவுரிசங்கர் ராஜூவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு சென்ற அவர், மாணவன் நித்தீனை காப்பாற்ற முயன்றார். ஆனால், மாணவனும், தலைமையாசிரியரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் போலீசார் சடலங்களை மீட்டனர். மாணவனை காப்பாற்ற முயன்ற ஆசிரியரும் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.