கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை..!

உலகத்தையே அச்சுறுத்திய கரோனா வைரஸ் தொற்று கடந்த சில ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்தாலும், தற்போது புதிய புதிய வடிவங்களில் உருமாறி வருகிறது. ஆனால் அந்த வைரஸ்களால் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இந்நிலையில் தற்போது புதிய வகை கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மீண்டும் அச்சுறுத்தி வருகிறது.
அந்த வகையில் இந்தியா முழுவதும் 7300 க்கு மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் 230க்கு மேற்பட்டோர் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கரோனா தொற்று காரணமாக சிகிச்சைக்காக வருபவர்களிடம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
புகாரின் அடிப்படையில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் யாரேனும் கரோனா தொற்று உறுதி செய்தால் அவர்களுக்கு சிறப்பு கட்டணமோ? அல்லது கூடுதல் கட்டணமோ? வசூலிக்க கூடாது என்றும், வீரியம் இல்லாத கரோனா தொற்றுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.