இனி தெருக்களில் மாடுகள் சுற்றித் திரிந்தால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை..!
மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது;
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளது. மாடுகளை போதிய அளவில் பராமரிக்காத உரிமையாளர்கள் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரிக்கை விடுத்தது. இதையும் மீறி கால்நடைகள் சாலைகள், தெருக்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் மாடுகளின் உரிமையாளர்களே இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
எனவே, மாடுகள் வளர்ப்போர் தங்களது தங்களது மாடுகளை தங்களுக்குச் சொந்தமான இடங்களில் கட்டி வைத்துப் பராமரிக்க வேண்டும். மேலும், மாடுகள் சாலையோரம், தெருக்களில் சுற்றித் திரிந்தால் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு, பொது ஏலத்தில் விடப்படும். மாடுகள் தனியார் நிறுவன மாடுபிடி வீரர்கள் மூலமாக பிடிக்கப்பட்டு அவை மாநகராட்சி கால்நடை காப்பகத்தில் ஒப்படைக்கப்படும்.
எனவே, மாடுகளின் உரிமையாளர்கள் சாலைகள், தெருக்களில் கால்நடைகளை திரிய விடாமல், பாதுகாப்பாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், மாட்டின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்தச் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.