வெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை! செல்லூர் ராஜூ அதிரடி!

"வெங்காய பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் வெங்காயத்தின் வரத்து குறைந்துபோனது. இதனால், வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னை தோனாம்பேட்டையில் அமைந்துள்ள பண்ணை பசுமை கடையில் வெங்காய விற்பனையை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெங்காயம் விளையும் மாநிலங்களில் அதிக கன மழை பெய்வதால், தமிழகத்திற்கு வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் வெங்காயம் கிலோ 100 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, பொது மக்கள் சிரமத்தை குறைக்கவே, பண்ணை பசுமை கடையில் கிலோ ரூ.45க்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டார். மேலும், வெங்காயம் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.