இன்றும் பங்கேற்கவில்லை...இபிஎஸ்.க்கு உடல்நலக்குறைவா?
சட்டப்பேரவையின் முதல் நாளில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தவிர மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் "யார் அந்த சார்" பேட்ஜை அணிந்து இருந்தனர். அதுமட்டுமல்லாமல் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி வேண்டும் என்ற பதாகைகளை கையில் ஏந்தி அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சட்டமன்றத்தில் இருந்து அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.
நேற்று சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டம் நடந்த போதும் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். ஆனால் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக விசாரித்த போது எடப்பாடி பழனிசாமி கடுமையான காய்ச்சல் அவதிப்பட்டு வருவதால் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியது.
இந்நிலையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 2வது நாளாக இன்றும் பங்கேற்கவில்லை. 2 நாட்களாக யார் அந்த சார் பேட்ஜ் அணிந்து சென்ற அதிமுகவினர் இன்று கறுப்புச் சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர். அண்ணா பல்கலை. விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி ADMK தரப்பில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.