1. Home
  2. தமிழ்நாடு

இன்றும் பரபரப்பு..கோழிக்கோடுக்கு பதில் கோவையில் இறங்கிய துபாய் விமானம்!

1

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி ப்ளை துபாய் நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 164 பயணிகள் இருந்தனர். கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க விமானம் தயாரானது. அப்போது வானிலை மிகவும் மோசமாக இருந்தது. அதன் காரணமாக அரைமணி நேரமாக அந்த விமானம் வானிலேயே வட்டம் அடித்தது.

வானிலை சீராகாமல் இருந்ததால் பாதுகாப்பு கருதி விமானம், கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. இதையடுத்து, இன்று காலை 7.45 மணியளவில் விமானம் தரையிறங்கியது. திடீரென கோவை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதால் பயணிகள் சிறிதுநேரம் புரியாமல் குழம்பி போயினர். பின்னர் நிலைமை அறிந்து சமாதானம் ஆகினர்.

விமான நிலையத்தில் பயணிகளுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படும் என்று விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வானிலை சீரான பின்னர், மீண்டும் விமானம் கோழிக்கோடு விமான நிலையம் புறப்பட்டு செல்லும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர். மோசமான வானிலையால் கோழிக்கோடு செல்லவேண்டிய விமானம், கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியதால் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

ஏற்கனவே வெள்ளிக்கிழமை இரவு, திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டு அந்த விமானம் 2 மணி நேரம் வானில் வட்டமடித்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது விமானப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Trending News

Latest News

You May Like