1. Home
  2. தமிழ்நாடு

நூற்றுக்கணக்கான பயணிகளைக் காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு விருது..!

1

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகப் பணியாற்றும் ரெயில்வே ஊழியர்களை அங்கீகரிக்கும் வகையில் தேசிய அளவில் “அதி விஷிஸ்ட் ரெயில் சேவா புரஸ்கார்” (Ati Vishisht Rail Seva Puraskar) என்ற விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்காக இந்த ஆண்டு இந்திய அளவில் 100 சிறந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தெற்கு ரெயில்வேயை சேர்ந்த 6 ஊழியர்கள் மற்றும் 2 ரெயில்வே அதிகாரிகள் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை கோட்டத்தில் முதுநிலை மண்டல மின்பொறியாளர் மஞ்சுநாத் யாதவ் மற்றும் நிலைய கண்காணிப்பாளர் ஜாபர் அலி ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

டெல்லியில் வரும் 21-ந் தேதி நடைபெறும் 69-வது ரயில்வே வார விழாவில் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விருதுகளை வழங்கிப் பணியாளர்களைக் கவுரவிக்க உள்ளார்.

கடந்த 2023 -ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. டிசம்பர் 17 -ந் தேதி இரவு 800 பயணிகளுடன் செந்தூர் விரைவு ரெயில் ஸ்ரீவைகுண்டம் அருகே சென்று கொண்டிருந்தது.

ரெயில் பாதை வெள்ள நீரில் மூழ்கி இருப்பதை அதிகாரியிடமிருந்து எச்சரிக்கை தகவலைப் பெற்று ஸ்டேஷன் மாஸ்டர் சில நிமிடங்களில் திருச்செந்தூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தினார்.

இந்த நிலையில் பயணிகள் கோபமடைந்து ஸ்டேஷன் மாஸ்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் விடிந்தவுடன் ரெயில் நிலையத்தின் நான்கு புறமும் வெள்ளம் சூழ்ந்திருப்பதைக் கண்டு ஆபத்துகுறித்து உணர்ந்து கொண்டனர்.

இதையடுத்து மீட்பு படையினர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு சென்று பயணிகளைப் பத்திரமாக மீட்டனர்.

உடனடியாக நிலைமையைப் புரிந்துகொண்டு செயல்பட்டு நூற்றுக்கணக்கான பயணிகளைக் காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு மத்திய அரசின் ரயில்வே துறையின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாபர் அலிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like