நாளை மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம்: பேருந்துகள் ஓடாது...!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை கேரள மாநிலத்தில் தனியார் பஸ் இயக்குநர்கள் காலவரையற்ற பணி நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் சுமார் 8,000 க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் சேவையிலிருந்து விலகும் அபாயம் உள்ளது.
இந்தப் பணி நிறுத்தம், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய கோரிக்கைகள் என்னென்ன ?
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆர்.1 சிறப்பு கட்டணத்தை உயர்த்த வேண்டும்.
பஸ் டிரைவர் மற்றும் ஊழியர்களுக்கு தேவையான போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் முறையை ரத்து செய்ய வேண்டும்.
140 கிமீக்கு மேற்ட்ட தூரத்திற்கு அனுமதி பெறும் பஸ்களுக்கு உரிய லிமிட்டெட் ஸ்டாப் அனுமதி வழங்கப்பட வேண்டும்.
அதிக அளவில் விதிக்கப்படும் இ செல்லான் அபராதங்களை குறைக்க வேண்டும்.
ஜிபிஎஸ், சிசிடிவி உள்ளிட்ட வாகன கண்காணிப்பு சாதனங்களுக்கான கட்டாய ஏற்பாடுகளை அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்.
நாளை கேரளாவில் மாநிலம் முழுவதும் பெரும்பாலான தனியார் பஸ்கள் செயல்படாது என்பதால் சேவைகள் மிதமான அளவில் மட்டும் செயல்படும் என கூறப்படுகிறது. எனினும் சில வழித்தடங்களில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் தனியார் பேருந்துகளுக்கு ஆதரவாக வாடகை ஆட்டோ உள்ளிட்ட வாகன சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை என தெரியவந்துள்ளது.
இதனால் ஆட்டோக்கள் இயக்கம் வழக்கம்போல் இருக்கும் என தெரிகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிகிறது.