முதல் முறையாக தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ளும் மாநில நெடுஞ்சாலைத்துறை..!
தூத்துக்குடி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை, ராமநாதபுரம் - ராமேஸ்வரம் - தனுஷ்கோடி வழித்தடம், கோவை - சத்தியமங்கலம் வழித்தடத்தில் இரண்டு வழித்தடங்கள் சத்தியமங்கலம் - கர்நாடக எல்லை வழி விரிவுபடுத்தப்படுகிறது. கூடுதலாக பல பைபாஸ் திட்டங்களும் மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, ஏற்கனவே, கிழக்கு கடற்கரைச் சாலை முதல் தூத்துக்குடி - கன்னியாகுமரி இடையே திருச்செந்துர் வழியாக 120 கிலோ மீட்டர் சாலையை அகலப்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துவிட்டது. இதற்குத் தேவையான நிலத்தை பெறுவதற்காக ரூ.393.33 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது.
கிழக்குக் கடற்கரை சாலை முதல் மாமல்லபுரம் - நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டுள்ளது. இதில் 120 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட தூத்துக்குடி - கன்னியாகுமரி சாலை அமைக்கும் பணி மாநில நெடுஞ்சாலைத் துஐறயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுபோலவே, ராமநாதபுரம் - ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மாநில நெடுஞ்சாலை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவை - சத்தியமங்கலம் - தமிழகம் - கர்நாடக எல்லைச் சாலை அமைக்கும் பணிகளுக்கு ரூ.639.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் பணிக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததும், வேலை தொடங்கவிருக்கிறது. வேலூர், வேட்டவளம், திருவையாறு உள்ளிட்டப் பகுதிகளில் பைபாஸ் சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு பதிலாக மாநில நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்ளவிருக்கிறது. இந்த திட்டப் பணிகளுக்கான மதிப்பு ரூ.559.17 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.