1. Home
  2. தமிழ்நாடு

சட்டப்பேரவையில் இன்று மாநில சுயாட்சி தீர்மானம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல்..!

1

நீட் விவகாரம், மொழிக் கொள்கை, நிதி பகிர்ந்தளிப்பு, பேரிடர் நிவாரணம், திட்டங்கள் என பல வகைகளில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். ஒரே நாடு ஒரே திட்டம் குறித்தும் விமர்சனங்கள் வைத்துள்ளார். மாநிலப் பட்டிலில் உள்ள விவகாரங்களிலும் மத்திய அரசு கைவைப்பதாக விமர்சனம் செய்து வருகிறார்.


குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை செயல்படவிடாமல் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு போட்டி அரசு நடத்துவதாக குற்றம்சாட்டினார். சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி வழங்காத நிலையில், அதற்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் ஆளுநரின் செயல் சட்ட விரோதம் என அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடுவும் விதித்தது.


இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமைகளை நிலைநாட்டினால் தான் தமிழ் மொழியை காக்க முடியும். தமிழ் இனத்தையும் உயர்த்த முடியும். இதனை உறுதி செய்திடும் வகையில் இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்” என்று தகவல் தெரிவித்து இருந்தார்.


இந்த நிலையில் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடுகிறது. அப்போது மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்க வலியுறுத்தும் வகையில், மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து முன்மொழிந்து பேசவுள்ளார். அதன்பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தின் மீது பேசுவார்கள். இறுதியாக உறுப்பினர்களின் வாக்கெடுப்புக்குப் பிறகு அது நிறைவேற்றப்பட உள்ளது.

மாநில உரிமைகள் தொடர்பான விவாதங்கள் இந்திய அளவில் எழுந்துள்ள நிலையில், ஸ்டாலின் கொண்டு வரும் இந்த தீர்மானம் முக்கியமானதாக மாறியுள்ளது.

Trending News

Latest News

You May Like