முதலமைச்சராக ஸ்டாலின் முதல் கையெழுத்து.. இந்த 3 திட்டங்களுக்கு தான் !!
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை உடன் வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கிறது திமுக. இன்று காலை 9 மணிக்கு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்கிறார். அதற்கான ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், பதவியேற்றதும் மு.க. ஸ்டாலின் முதன்முதலில் எந்த திட்டத்திற்கு கையெழுத்திடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே, திமுக தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முக்கியமான திட்டமாக பார்க்கப்பட்டது. மேலும் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்தை கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி முதல் செயல்படுத்த இருப்பதாகவும் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், பதவி ஏற்றதும் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துவார். அதன் பிறகு கோட்டைக்கு செல்கிறார். அங்கு முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்ததும் 3 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- அதில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்திடுவார் என்று தெரிகிறது. இந்த திட்டம் ஜூன் 3ஆம் தேதி தொடங்குவதாக இருந்தாலும் அதற்கு சில நடைமுறைகள் உள்ளதால் இப்போதே கையெழுத்திட்டால்தான் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும் என்பதால் அதில் கையெழுத்திடுவார் என தெரிகிறது.
- தமிழகம் முழுவதும் நகர பேருந்து பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் அதற்கான கோப்பில் கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது.
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையாகத் தற்போது வழங்கப்படும் ரூ.25 ஆயிரத்தை ரூ.30 ஆயிரமாக உயர்த்துவதுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்துக்கும் அவர் கையெழுத்திடுவார் என தெரிகிறது.
இது தவிர பல்வேறு முக்கிய அறிவிப்புகளிலும் அவர் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in