31 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறுவது பொய் : சீமான்..!
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த நாம் தமிழர் கட்சி சீமான், தரிசனத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் உலக முதலீடுகளின் மூலம் 10 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளதாகவும் 31 லட்சம் பேருக்கு வேலை கொடுத்துள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் டிஆர்பி.ராஜா கூறுவது பச்சை பொய். இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டு, அதில் உண்மையில்லையெனில், வழக்கு தொடர்வேன்.
மேலும், நேர்மையாக ஆட்சி செய்யும்போது முதலீடுகள் தானாக தேடி வரும் மாறாக ஊர் ஊராக சென்று, முதல்வரும், பிரதமரும் முதலீடுகளை ஈர்க்க செல்வது தரகர் வேலை பார்ப்பதற்கு சமமானது. என்னை பேசி, பேசி சோர்ந்து போனவர்கள் தற்போது தம்பி விஜய்யை விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய்க்காக பேச அவரது அண்ணன் நான் இருக்கிறேன் எனக்கு பேச தான் யாரும் இல்லை.
நிறங்கள் பொதுவானது எங்கள் கட்சி கொடியில் கூட சிவப்பும், மஞ்சளும் உள்ளது. இந்த நிலையில் விஜயின் கட்சி கொடியில் உள்ள மஞ்சள், சிவப்பு நிறத்தை பற்றி விமர்சிக்கின்றனர் என்று சீமான் கூறினார்.
விஜய்யுடன் கூட்டணி சேருவீர்களா என்ற கேள்விக்கு, “நானே எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது செப்டம்பர் 22 மாநாட்டுக்குப் பிறகு தம்பி விஜய் இதுகுறித்து தெரிவிப்பார்” என்றார். திருச்சி எஸ்பி வருண் நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்வது குறித்த கேள்விக்கு பதில் அளித்தபோது, “என் மீது 1308 வழக்குகள் உள்ளன. அதனை 2000 வழக்குகள் ஆக்குவதற்கு அவர் முயற்சிக்கிறார். நான் அதிகாரத்தை எதிர்த்து பேசி வருபவன். அந்த அதிகாரத்தில் ஒரு புள்ளி தான் திருச்சி எஸ்பி என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.