1. Home
  2. தமிழ்நாடு

ஸ்டாலின் பிறந்த நாள் பிளாஷ்பேக்! 24 வது பிறந்தநாளை சிறையில் கொண்டாடினார் ஸ்டாலின்..!

1

மார்ச் 1-ம் தேதி 1953-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டாவது மகனாக பிறந்த ஸ்டாலினுக்கு, 1975-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் நடந்தபோது தி.மு.க வின் உறுப்பினராகவும், இளையோர் தி.மு.க அமைப்பு என்கிற அமைப்பின் செயலாளராகவும் ஸ்டாலின் இருந்துவந்தார். ஸ்டாலினுக்குத் திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் கழிந்திருந்தது. 1976-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் எமர்ஜென்சி சட்டத்தை அதிரடியாகக் கொண்டுவந்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.


எமர்ஜென்சி சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பெரும் கிளர்ச்சி வெடித்தது. குறிப்பாக பிகாரில் ஜெய்பிரகாஷ் நாராயணன் தலைமையில் பெரும் போராட்டங்கள் நடந்தன. எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டனர். எமர்ஜென்சி சட்டம் அமல்படுத்தப்பட்ட நேரத்தில் தமிழகத்தில் கருணாநிதியின் தலைமையிலான தி.மு.க ஆட்சியிலிருந்தது. எமர்ஜென்சிக்கு எதிராக தி.மு.க குரல் கொடுத்ததால், உடனடியாக அந்த ஆட்சி கலைக்கப்படுவதாக 1976-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி அறிவிப்பு வெளியானது. ஆட்சிக்கலைப்பு நடந்த அடுத்த சில மணிநேரங்களில் கோபாலபுரம் இல்லத்தில் காவல்துறை குவிக்கப்பட்டது. கருணாநிதியை தான் கைது செய்யப்போவதாக தி.மு.க வினர் பலரும் எதிர்பார்த்தனர்.ஆனால் காவல்துறையினர் கருணாநிதியிடம் “உங்கள் மகன் ஸ்டாலின் எங்கே?” என்று கேள்வி எழுப்பியது கருணாநிதிக்கே அதிர்ச்சியைக் கொடுத்தது.


கருணாநிதியின் வீட்டில்தான் அப்போது ஸ்டாலின் வசித்தார். உடனடியாக ஸ்டாலினுக்குத் தகவல் சொல்லப்பட்டது. அப்போது துர்கா கர்ப்பிணியாக இருந்த நேரம். ஸ்டாலினைக் கைது செய்த காவல்துறை சென்னை மத்திய சிறையில் பிப்ரவரி 1-ம் தேதி அடைத்தது.சிறையில் ஸ்டாலின் சந்தித்த கொடுமைகள் பற்றியும் உங்களில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் குறிப்பிட இருக்கிறார்.சிறையில் ஸ்டாலினுடன் சிட்டிபாபுவும் இருந்தார். இரண்டு பானைகள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டது குறித்தும், சிட்டிபாபு மரணம் குறித்தும் பல தகவல்களை சுயசரிதையில் ஸ்டாலின் குறிப்பிட உள்ளார். சிறையில் ஸ்டாலின் இருந்தபோதுதான் அவரது 24வது பிறந்த நாள் மார்ச 1-ம் தேதி இருண்ட பிறந்த நாளாகவே கழிந்தது.


ஸ்டாலின் வாழ்வில் மறக்க முடியாத பிறந்த நாளாக அந்த பிறந்த நாள் இருந்தது. திருமணம் முடிந்த சில மாதங்களிலே கருவுற்ற மனைவியை பிரிந்த சோகம், சிறைக்குள் நடந்த சித்திரவதைகள் மறுபுறம் என ஸ்டாலினுக்கு அந்த பிறந்த நாள் சோகத்துடன் கழிந்தாலும் அரசியல் களத்தில் ஸ்டாலினின் பாதங்கள் அழுத்தமாக பதிவதற்கும் சிறைவாசம் ஒரு வலுவான காரணம்.


அதன்பிறகு தி.மு.க வில் படிபடியாக பதவிகளைப் பெற்று இன்று தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடுகிறார்.பிறந்த நாள் அன்று அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெறுவார். 

Trending News

Latest News

You May Like