1. Home
  2. தமிழ்நாடு

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினின் 5 மெகா உறுதிமொழிகள்: சத்துணவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்!

1

விரைவில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். குறிப்பாக, ஐந்து முக்கிய உறுதிமொழிகளை முதலமைச்சர் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார். அதன் விவரங்கள் வருமாறு:

  • சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள்: சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் ₹2,000-லிருந்து ₹3,400 ஆக உயர்த்தப்படுகிறது. மேலும், சத்துணவு அமைப்பாளர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பணி நிறைவு பெறும்போது வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ₹2 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

  • கலைஞர் கனவு இல்லம்: 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் மேலும் ₹3,500 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும். அத்துடன் ₹1,088 கோடி செலவில் 2,200 கி.மீ. தொலைவிற்கு கிராமச் சாலைகள் மேம்படுத்தப்படும்.

  • சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம்: முதியவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், கைம்பெண்கள் மற்றும் நலிவடைந்த நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மேலும் 1.80 லட்சம் பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.

  • பகுதி நேர ஆசிரியர்கள்: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் பகுதி நேர ஆசிரியர்களை நியமனம் செய்ய விரைவில் அரசாணை வெளியிடப்படும். அரசுப் பள்ளி நிரந்தரப் பணியிடங்களுக்கான தேர்வுகளில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு அவர்களின் பணிக்காலத்திற்கு ஏற்பச் சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

இவற்றை அறிவித்த முதல்வர், "முதலமைச்சராக எனது இலக்கை நான் வென்றுவிட்டேன். திராவிட மாடல் ஆட்சியால் தமிழ்நாடு தலைநிமிர்ந்துள்ளது" எனச் சட்டப்பேரவையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விடப் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், 'திராவிட மாடல் 2.0' ஆட்சி புதிய சாதனைகளைப் படைக்கும் எனவும் அவர் சூளுரைத்தார்.

மேலும் ஆளுநர் குறித்துப் பேசுகையில், "ஆளுநர் தன் உரையைப் படிக்காமல் தவிர்ப்பது வேடிக்கையாக உள்ளது. பொறுப்புள்ள பதவியை ஆளுநர் அவமதிக்கிறார். இது மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால்" என்றும் முதல்வர் ஸ்டாலின் சாடினார்.

Trending News

Latest News

You May Like