1. Home
  2. தமிழ்நாடு

ஸ்டாலின் அதிரடி : திமுக பொறுப்புகளில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம்..!

1

சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் 159 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றி என்பதை இலக்காக கொண்டுள்ளது திமுக. இதற்காக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை நடத்தி அளித்த பரிந்துரைகள் அடிப்படையில் மாவட்டங்கள் பிரிப்பு, ஒன்றியங்கள் பிரிப்பு நடந்து புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

அடுத்தகட்டமாக மொத்தமுள்ள 234 தொகுதிகளும் ஏழு மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. மத்திய, டெல்டா மாவட்டங்களுக்கு கே.என்.நேரு, சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு ஆ.ராசா, வட மாவட்டங்களில் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கொங்கு மாவட்டங்களில் செந்தில்பாலாஜி, அர.சக்கரபாணி, தென் மாவட்டங்களுக்கு தங்கம் தென்னரசு, கனிமொழி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகிகளுடன் முதற்கட்ட ஆலோசனையை முடித்துவிட்டு, அடுத்தகட்ட பணிகளுக்கு தயாராகி உள்ளனர்.

தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாக திமுக தோல்வி அடைந்த மற்றும் செல்வாக்கு குறைந்த 100 தொகுதிகளில் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. உடன் பிறப்பே வா என்ற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தொகுதிகளைச் சேர்ந்த குறிப்பிட்ட சில நிர்வாகிகளை அழைத்து கட்சிக்குள் இருக்கும் பிரச்னை, வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களைக் கேட்டறிந்து வருகிறார்.

அந்த வகையில் கிருஷ்ணகிரி, அணைக்கட்டு, சங்கராபுரம் தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இன்று உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் தனித் தனியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். கிருஷ்ணகிரி தொகுதியில் வெறும் 794 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தோல்வியைத் தழுவியது. அணைக்கட்டு தொகுதியில் 2037 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சங்கராபுரம் தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது.

மாவட்டச் செயலாளர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகளிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார். நிர்வாகிகளிடம் பேசிய ஸ்டாலின், “கட்சிப் பொறுப்புகளில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உழைப்பவர்களுக்கு ஏற்ற அதிகாரம் கட்சியில் நிச்சயம் கிடைக்கும். தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற்றாக வேண்டும், அதற்கு ஏற்ற வகையில் உழைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தி அனுப்பியுள்ளார்.

தற்போது திமுக கூட்டணிக் கட்சிகள் கடந்த முறை ஒதுக்கியதை விட அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றன. கூடுதல் தொகுதிகள் கேட்போம் என்று பெ.சண்முகம் ஏற்கனவே தெரிவித்துவிட்டார். இரட்டை இலக்கத் தொகுதிகள் கேட்கும் முடிவில் விசிக இருக்கிறது. மதிமுகவோ 12 சீட்களுக்கு குறையாமல் வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஆகவே, கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டிய நெருக்கடி திமுகவுக்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஆகவே, இந்த முறை தேர்தலில் திமுக போட்டியிடும் இடங்கள் சற்று குறையலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனாலும், கூட்டணி சலசலப்புகளைத் தாண்டி கண்டிப்பாக 170 இடங்களுக்கு குறையாமல் திமுக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த மாதங்கள் பலவீனமான 100 தொகுதிகளை குறிவைத்து திமுக காய்களை நகர்த்த உள்ளது.

Trending News

Latest News

You May Like