விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத அறியாத ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே - இபிஎஸ் விமர்சனம்..!

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக அரசு டெல்டா விவசாயிகளை பாதிக்கும் வகையில் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் கூறுகையில், சேலம் மாவட்டம் தலைவாசலில் 1,100 ஏக்கர் நிலத்தில் ரூ.1,025 கோடி மதிப்பில் கால்நடை பூங்கா திறக்கப்பட்டது. இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய பூங்கா. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் விவசாயிகளுக்கு நிறைய பலன் கிடைத்திருக்கும்."
"கலப்பின பசு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டிருந்தால் பால் உற்பத்தி அதிகரித்திருக்கும். நாட்டு காளைகள் இனம் காக்கப்பட்டிருக்கும். ஆடு மற்றும் கோழி இன ஆராய்ச்சி மூலமும், மீன் வளர்ச்சி மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும். இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் பல மடங்கு உயர்ந்திருக்கும்". ஆனால் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை.
திமுக அரசு மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் ஆய்வு திட்டங்களுக்கு அனுமதி அளித்து டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சித்தது. ஆனால் அம்மாவின் அரசு அதை தடுத்து நிறுத்தி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. இதன் மூலம் டெல்டா விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தது.
அதிமுக ஆட்சியில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டது. இதன் மூலம் காவிரியில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட்டது. அத்திக்கடவு-அவினாசி திட்டம் 80 சதவீதம் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர், அந்த திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்தார். மேற்கு மண்டல மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகி உள்ளது என்றார். ஆனால் இந்த திட்டத்தை மாநில நிதியில் நிறைவேற்றியது அம்மாவின் அரசு என்பதை மேற்கு மண்டல மக்கள் நன்கு அறிவார்கள்.
மேட்டூரில் காவிரியின் உபரி நீர் மூலம் 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பப்பட்டது. இந்த திட்டத்தின் பணிகள் 75 சதவீதம் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 50 மாதங்கள் ஆகியும் இன்னும் அந்த திட்டம் முழுமை பெறவில்லை.
ஸ்டாலின் 2021-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் மூன்று ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காப்பீடு வழங்கவில்லை. ஆனால் நேற்று நடந்த விழாவில் 4 ஆண்டுகளில் பயிர் காப்பீடாக ரூ. 5,720 கோடி பெற்று தந்ததாக பேசியுள்ளார். 2017-18 முதல் 2021 வரை 4 ஆண்டுகளுக்கு பயிர் காப்பீடாக சுமார் ரூ. 12 ஆயிரம் கோடியை அம்மாவின் அரசு தான் விவசாயிகளுக்கு பெற்று தந்தது. இதன் மூலம் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்தது.
மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு அதிக நிவாரணம் வழங்கியதாக பேசியுள்ளார். ஆனால் அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வலியுறுத்தினார். ஆனால் முதலமைச்சர் ஆனவுடன் ஹெக்டேருக்கு ரூ. 13,500 மட்டுமே வழங்கினார்.
NDRF நிதியை ஹெக்டேருக்கு ரூ. 13,500-லிருந்து 17,000-மாக உயர்த்தியதை கூட ஸ்டாலின் அரசு விவசாயிகளுக்கு தரவில்லை. டெல்டா மாவட்டங்களில் 2021 முதல் 2024 வரை 4 ஆண்டுகள் உரத் தட்டுப்பாடு நிலவியது. விவசாயிகள் இதை இன்னும் மறக்கவில்லை.
அதிமுக அரசு 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்தது. வறட்சியின் போது 2016-17ஆம் ஆண்டு ரூ. 2,247 கோடி வறட்சி நிவாரணமாக வழங்கியது. சிறப்பு குறுவை மற்றும் சம்பா சாகுபடிகளுக்கு சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் தமிழகம் மத்திய அரசின் ‘கிர்ஷி கர்மான்' விருதை பெற்றது. ஆனால் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ச்சிய ஸ்டாலினை விவசாயிகள் மறக்க மாட்டார்கள்.
நாங்கள் 1.4.2021 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தோம். அதையும் ஸ்டாலின் அரசு கிடப்பில் போட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் இன்று வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. நேற்று நடந்த கூட்டத்தில் டன் ஒன்றுக்கு ரூ. 3,500 வழங்குவதாக பெருமை அடித்துக் கொண்டுள்ளார். 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்கள். ஆனால் தற்போது முழுமையாக 100 நாட்கள் வேலை வழங்குவதுமில்லை. சம்பளமும் உயர்த்தப்படவில்லை.
ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஏரி குளங்கள் பாதுகாக்கப்படும் என்று அறிவித்தார்கள். அது அறிவிப்போடு நிற்கிறது. அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம், புதிய தடுப்பணைகள், விவசாயிகளுக்கு இலவச வண்டல் மண் என்று ஏராளமான திட்டங்கள் தீட்டப்பட்டன. இதன் காரணமாக தமிழகமெங்கும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. 83 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை எங்கள் ஆட்சியில் தூர் வாரப்பட்டது.
யார் உண்மையான விவசாயி?
அதிமுக ஆட்சியில் சுமார் 2,136 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் போதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்காததால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மழையில் நனைந்து வீணானது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கும் உடனுக்குடன் பணம் வழங்கப்படுவதில்லை. இன்று வரை நெல் மூட்டைகள் மழையில் நனைவது தொடர்கதையாக உள்ளது.
தலைவாசலில் கரும்புத் தோட்டத்தில் கோட் ஷூட் அணிந்து சென்றது ஸ்டாலின் தான். ஆனால் நான் பிறந்தது முதல் இன்று வரை விவசாயக் குடும்பம். நான் ஒரு விவசாயி என்பதை பெருமையாக கூறுவதோடு இன்றும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். விவசாயிகளின் கஷ்டங்களை முழுமையாக அறிந்தவன். விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத ஸ்டாலின் விளம்பரம் மூலம் ஆட்சி புரிகிறார். நான் உண்மையான விவசாயியா? நீங்கள் உண்மையான விவசாயியா? நீங்கள் தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
தமிழக மக்கள் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது யார் உண்மையான விவசாயி என்பதையும், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்குப் பாடுபட்ட அம்மாவின் அரசை மனதில் நிறுத்தியும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.