மோடியின் செல்லக் குழந்தையாக வளர்ப்புப் பிள்ளையாக ஸ்டாலின் இருக்கிறார் -ஜெயக்குமார்..!
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என சென்னை எழும்பூரில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில், எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக், வேல்முருகன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நெல்லை முபாரக், முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டால் அடைந்த பலன்கள் என்ன என்பது குறித்து வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் எனவும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். , முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை வாக்குறுதிபடி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
எஸ்டிபிஐ பேரணிக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். மேடையில் பேசிய ஜெயக்குமார் கூறியதாவது:-
மதத்தின் பெயரால் அரசியல் செய்யும் பாசிச மோடி அரசாங்கம், இஸ்லாமிய சமூக மக்களை அழிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சட்டங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக வக்பு வாரிய சட்டம் இஸ்லாமிய மக்களின் உரிமைக்காகவே கொண்டு வரப்பட்டது. தற்போது வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வர குழு அமைத்துள்ள நிலையில், வரும் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என அமித்ஷா தெரிவிக்கிறார். இஸ்லாமிய மக்களின் உரிமைகளை பறிக்கும் பாசிச அரசாக மோடி அரசு மத்தியில் ஆண்டுகொண்டுள்ளது. மோடியின் பாசிச அரசுக்கு துணை போகும் வகையில் தமிழகத்தில் பாசிச அரசு உள்ளது. அதுதான் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.
மோடியின் செல்லக் குழந்தையாக வளர்ப்புப் பிள்ளையாக ஸ்டாலின் இருக்கிறார். மோடியை சந்தித்த பிறகு, பாஜகவுக்கு எதிரான எந்தப் போக்கையும் திமுக கையில் எடுக்கவில்லை. தற்போது அமைச்சர்கள் மீதான வழக்குகள் எல்லாம் கையில் எடுக்கப்படவில்லை. வருமான வரி, அமலாக்கத் துறை ரெய்டு போகவில்லை. ஆனால், இவர்கள் கைகாட்டும் நபர்கள் வீட்டுக்கு ரெய்டு செல்கிறார்கள். இத்தனை எம்.பி.க்களை திமுக வைத்துள்ளதே, இஸ்லாமியர்களுக்கு தேசிய அளவிலான இட ஒதுக்கீடு தொடர்பாக ஏன் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.