பிரக்ஞானந்தாவிற்கு ரூ.30 லட்சம் பரிசளித்து வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின் ..!

இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு பரிசுத் தொகையாக 66 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு விளையாட்டுத் துறைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அரசு உயரதிகாரிகள், வீரர்கள் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.
மலர்களைத் தூவியும், மலர் கிரீடம் அணிவித்தும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளம் முழங்க திறந்தவெளி வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட பிரக்ஞானந்தாவுக்கு, வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செஸ் உலகக் கோப்பை தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயரிய ஊக்கத் தொகையான 30 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி, வாழ்த்தினார். தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்தார்.