இபிஎஸ்-க்கு செக் வைத்த ஸ்டாலின்..! ஒட்டுமொத்த ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்..!
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, அதிமுக சார்பில் மூன்று முறை முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த ஓ.பன்னீர்செல்வம் இன்று முறைப்படி திமுகவில் இணைந்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு 'உரிமை மீட்புக் குழு' மூலம் கட்சியை மீட்டெடுக்கப் போராடிய ஓபிஎஸ், தனது முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு தன்னைத் துளியும் மதிக்காததும், சசிகலா, டிடிவி தினகரன் போன்றவர்கள் தனித்தனிப் பாதையைத் தேர்ந்தெடுத்ததும் ஓபிஎஸ்-ஐ இந்த இறுதி முடிவுக்குத் தள்ளியுள்ளன.
தனது அரசியல் பயணத்தின் 'அடுத்த அத்தியாயத்தை' எழுதத் திட்டமிட்ட ஓபிஎஸ், இன்று காலை சென்னை நட்சத்திர ஓட்டலில் இருந்து அமைச்சர் சேகர்பாபுவுடன் ஒரே காரில் புறப்பட்டு அண்ணா அறிவாலயம் வந்தடைந்தார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான திமுக உடன்பிறப்புகள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த ஓபிஎஸ்-ஐ, முதல்வர் ஆரத்தழுவி அன்புடன் வரவேற்றார். தொடர்ந்து திமுக உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டுத் தனது 'தாய் கழக'ப் பயணத்தைத் தொடங்கினார்.
இந்த அரசியல் மாற்றத்தில் ஓபிஎஸ் தனித்து வரவில்லை; தனது மகன் மற்றும் முன்னாள் எம்பி-யான ரவீந்திரநாத், ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலருடன் திமுகவில் ஐக்கியமானார். ஏற்கனவே அவரது நம்பிக்கைக்குரிய தளபதிகளாக இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் திமுகவில் இணைந்துவிட்ட நிலையில், தர்மர் எம்பி மீண்டும் இபிஎஸ் பக்கமும், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் தவெக பக்கமும் சென்றது ஓபிஎஸ்-ஐத் தனிமைப்படுத்தியது. இந்தச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட திமுக, அதிமுகவின் முக்கியத் தூணாக இருந்த ஒருவரைத் தன் பக்கம் இழுத்து இபிஎஸ் தரப்புக்குப் பலத்த அடியைக் கொடுத்துள்ளது.
ஓபிஎஸ்-இன் இந்த வருகை வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படுகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க ஓபிஎஸ்-க்கு திமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பலமாகப் பேசப்படுகிறது. "அதிமுகவின் பலம், பலவீனம் அறிந்த ஒருவரைத் தளபதி அரவணைத்துள்ளது, வரவிருக்கும் தேர்தலில் திமுகவின் வெற்றியை இப்போதே உறுதி செய்துவிட்டது" என அண்ணா அறிவாலயத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.