துணை முதல்வர் குறித்து சர்ச்சை வீடியோ வெளியிட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது!
தமிழகத்தில் துணை முதல்வராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் சமீபத்தில் டெங்கு, மலேரியா போன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பொருள்படும்படி பேசியிருந்தார்.
உதயநிதியின் இந்த பேச்சு என்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே தான் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் என்பவர் 8 நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் துணை முதல்வர் உதயநிதி, மூன்று பிராண சன்னியாசிகளான ஜீயர்களை தன் வீட்டிற்கு அழைத்து, கால்களை கழுவி பாத பூஜை செய்துள்ளார். அந்த தீர்த்தத்தை பருகி ஆசி பெற்று, அவர்களுக்கு உணவிட்டு வெகுமதி அளித்து வழி அனுப்பி இருக்கிறார்.பிராமணர்களை இழிவுபடுத்தியதற்காகவும், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறவும் இதைச் செய்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் 3 ஜீயர்களை அழைத்து பரிகாரம் செய்ததாக கூறி சர்ச்சையை கிளப்பினார். ரங்கராஜன் நரசிம்மன் பதிவுக்கு, ஜீயர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஸ்ரீபெரும்புதுார் ஜீயர் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டது.
இந்த புகாரை தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்நிலையில் தான் ஸ்ரீரங்கம் ரங்கராஜனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மேலும் போலீஸ் வாகனத்தில் அமர்ந்து இருந்த ஸ்ரீரங்கம் ரங்கராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛இது சென்னை காவல்துறையா? ஸ்ரீரங்கம் காவல்துறையா என்பது தெரியவில்லை. என்னை இப்போது கைது செய்வதாக கூறி வீட்டுக்கு வந்து அழைத்து செல்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.