வரும் 21-ம் தேதி இலங்கை அதிபர் ரணில் இந்தியா வருகை..!
இலங்கையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீவிரமடைந்ததை தொடர்ந்து அப்போது அதிபராக இருந்த கோத்தபயா ராஜபக்சே உடனடியாக பதவி விலகி நாட்டை விட்டு தப்பிச் சென்றார். இதனை தொடர்ந்து இலங்கை புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார்.
மேலும், பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்த நாட்டை மீட்க இலங்கை இந்திய அரசிடம் உதவி கேட்டது. இதையடுத்து, இலங்கை அரசுக்கு இந்தியா பல கோடி ரூபாய் கடனுதவி வழங்கியது. எரிபொருள், உணவுப்பொருள் என பல்வேறு உதவிகளை இந்திய அரசு வழங்கியது.
கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கை தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், இலங்கை அதிபர் ரணில் விம்ரமசிங்கே 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வர உள்ளார். இம்மாதம் 21-ம் தேதி இந்தியா வரும் ரணி விம்ரமசிங்கே இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு மேம்பாடு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.