1. Home
  2. தமிழ்நாடு

இன்று தொடங்கவிருந்த நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தள்ளிவைப்பு..!

1

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு அக்.14-ஆம் தேதி தொடங்கப்பட்டது. பிரதமா் மோடி புதுதில்லியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கப்பல் போக்குவரத்தைத் தொடங்கிவைத்தாா்.. ‘செரியாபாணி’ என்ற பெயா் கொண்ட அந்த கப்பலில் பயணக் கட்டணமாக ரூ. 6, 500 ,18 சதவீதம் ஜிஎஸ்டியுடன் சோ்த்து ரூ.  7, 670 நிா்ணயம் செய்யப்பட்டது. கப்பல் போக்குவரத்து தொடங்கிய முதல்நாளில் எதிா்பாா்த்த பயணிகள் வராததால் 75 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டது. இதனால் ரூ. 2,375 கட்டணம்,  ஜிஎஸ்டி 18 சதவீதம் என மொத்தமாக ரூ. 2, 803 என கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டது.  இரண்டாம் நாளில் 7 போ் மட்டுமே பயணம் செய்ய முன்பதிவு செய்தனா். இதனால் கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.. 

இதைத்தொடா்ந்து, கப்பல் சேவை வாரத்துக்கு மூன்று நாள்கள் என மாற்றப்பட்டது. திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாள்கள் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.  எனினும் பயணிகள் வருகை குறைந்தே காணப்பட்டது. இதனால் கப்பல் போக்குவரத்து அக். 20-ஆம் தேதியுடன்   நிறுத்தப்பட்டது. இயற்கை சீற்றம் குறைந்தவுடன் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஜனவரி மாதம்  தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. . இதனிடையே,  நாகப்பட்டினம் - இலங்கை இடையே குறைந்த கட்டணத்துடன், கூடுதல் எடை அதாவது ஒரு நபா் 110 கிலோ கொண்ட பொருட்களை எடுத்து செல்லும் வசதி கொண்ட கப்பல் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.. இதையடுத்து, நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க மத்திய அரசு தமிழக அரசுடன் இணைந்து ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டது. 

தற்போது கோடை விடுமுறையையொட்டி அதிகளவில் பயணிகள் கப்பல் பயணம் மேற்கொள்ள விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே அந்தமானில் தயாராகியுள்ள சிவகங்கை கப்பல் மே10 ஆம் தேதி நாகை துறைமுகம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வராததால், போக்குவரத்து 17-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, இன்று தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து சேவை தற்போது 19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனால் யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மீண்டும் ஏமாற்றமடைந்துள்ளனர். அந்தமானில் இருந்து, நாகைக்கு வரவேண்டிய பயணியர் கப்பல் தாமதமானதால் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், பயணச்சீட்டு முன்பதிவு செய்த பயணிகள் வரும் 19-ம் தேதி தங்கள் பயணத்தை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like