இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

தமிழக அரசால் ஆண்டுதோறும் அமல்படுத்தப்படும் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 14ஆம் தேதி நள்ளிரவு வரை நடைமுறையில் இருந்தது. அதாவது மீன்களின் இனப்பெருக்கத்திற்காக குறிப்பிட்ட 60 நாட்கள் கடலுக்குள் விசைப்படகுகளை பயன்படுத்த தடைவிதிக்கப்படும். இந்த தடைகாலம் நீங்கியதை தொடர்ந்து, தமிழக கடலோர பகுதிகளில் வாழும் மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், 15ஆம் தேதி ஞாயிற்றுகிழமை என்பதால், 16ஆம் தேதி அதிகாலையே நிறைய இடங்களில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். ஆனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல கடந்த திங்கட்கிழமை தயாரான நிலையில், வங்கக்கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக அரசால் மீனவர்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து மீன்பிடி தடைகாலம் முடிந்து 64 நாட்களுக்கு பின்பு நேற்று தான் (18 ஜூன்) ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
ஆனால் கடலுக்குச் சென்ற தங்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டி அடித்ததாக கரை திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மீனவர்கள் கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை விரட்டி அடித்ததாகவும், ஒரு சில படகில் இருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெருத்த நஷ்டத்துடன் கரை திரும்பியதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும் தடைகாலம் முடிந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவு வகைகளும் அதிகளவு கிடைக்கும். ஆனால் மீன்பிடி தடைகாலத்தின்போது இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்தலில் ஈடுபட்டதால் தற்போது தங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் படகு ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.