மீண்டும் நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து நிறுத்தம்! பயணிகள் அவதி!

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கும் இலங்கையின் காங்கேசன் துறைக்கும் இடையே வாரத்தில் செவ்வாய் கிழமை நீங்கலாக ஆறு நாள்கள் பயணிகள் கப்பல் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, சில நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட தமிழக கடலோரப் பகுதிகளிலும் சூறாபளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் சில நேரங்களில் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் செவ்வாய், புதன் (ஜூன் 17, 18) ஆகிய கிழமைகளில் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள வானிலை நிலவரங்களைப் பொறுத்து பாதுகாப்பு கருதி நாகை - இலங்கை பயணிகள் கப்பல் சேவை அவ்வப்போது நிறுத்தப்படும். அந்த வகையில் கடல் சீற்றம் மற்றும் சூறாவளி காற்று எச்சரிக்கை காரணமாக இன்று முதல் ஜூன் 18 புதன் கிழமை வரை பயண சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் போது சில மாதங்கள் பயண சேவை நிறுத்தப்படும். கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களிலும், இந்த ஆண்டு ஜனவரி மாதமும் என மூன்று மாதங்கள் பயண சேவை ரத்து செய்யப்பட்டது, மீண்டும் பிப்ரவரி மாதம் தான் பயணிகள் கப்பல் சேவை பயன்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கப்பல் போக்குவரத்தை தற்போது சிவகங்கை என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. இதில் ஒரு வழி கட்டணமாக 4250 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இரு வழி கட்டணமாக 8500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பயணிகள் தலா 10 கிலோ வரை லக்கேஜ்களை இலவசமாக கொண்டு செல்லலாம், அதற்கு மேல் கொண்டு செல்லும் லக்கேஜ்களுக்கு ஒரு கிலோவுக்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. www.sailsubham.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.