நாகை - இலங்கை கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தம்..!
ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதி நாகை - இலங்கை இடையே சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் சேவை தொடங்கியது. முதலில் தினந்தோறும் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் முன்பதிவு குறைவாக இருந்ததால் வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு மூன்று நாட்களாக குறைக்கப்பட்டு இயக்கப்பட்டது. அதன் பின்னர் வாரத்தில் 5 நாட்கள் கப்பலை இயக்க கப்பல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று முன்பதிவும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், வானிலை காரணமாக நாகை - இலங்கை கப்பல் சேவை நவ. 19 முதல் டிச. 18 வரை கப்பல் நிறுத்தப்படும் என்றும், நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய இரு பகுதிகளிலும் பயணிகளின் வசதிக்காக நவ. 15, 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என்றும் கப்பல் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், டிச. 18-க்குப் பிறகு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.