1. Home
  2. தமிழ்நாடு

அமுலுக்கு வந்த ஸ்பாட் பைன்..!! இனி யாரும் தப்பிக்க முடியாது ..!!

1

கடந்த சில நாட்களுக்கு முன்பு பொது இடங்களில் விதிகளை மீறி குப்பை கொட்டுவோர் மற்றும் எரிப்பவர்கள் மீது ஸ்பாட் பைன் மிஷின் மூலம் அபராதம் விதிக்கப்படும் எனவும், இதனை கண்காணிக்க அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுப்படுவார்கள் எனவும் தெரிவித்து இருந்தது. 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டட கழிவுகளை விதிமுறைகளை மீறி கொட்டுவோர் மற்றும் திடக்கழிவு மேலாண்மையை சரியாகப் பின்பற்றாதவர்கள் மீது மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்து வருகின்றனர்.

தொடர்ந்து, பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டடக் கழிவுகளை கொட்டுவதை தவிர்க்கவும், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கையை மேம்படுத்தவும் அபராதத் தொகை விதிக்கப்பட்டு வந்தது. கடந்த 5 ஆண்டுகளாகவே அபராதம் விதிக்கும் செயல்பாடு அமலில் இருந்து வந்தது.ஆனால்,அந்த திட்டம் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் கண்ணை மூடி கொண்டு குப்பைகளை கண்ட இடத்தில் வீசி சென்றனர்.

இதையெல்லாம் பொறுத்து பொறுத்து பார்த்த சென்னை மாநகராட்சி, இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கில் மன்ற கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது.அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பொது மற்றும் தனியார் இடங்களில் தூக்கி வீசப்படும் குப்பை மற்றும் வாகனங்களில் இருந்து குப்பை கொட்டுதல் உள்ளிட்டவற்றுக்கு அபராதம் ரூ.500 இல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தனிநபர் இல்லங்களில் தரம் பிரிக்காமல் வழங்கப்படும் கழிவுகளுக்கு ரூ.100 இல் இருந்து ரூ.1,000 ஆகவும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.5,000 ஆகவும் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

அங்கீகரிக்கப்படாத பொது இடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டுபவர்களுக்கும் கழிவுநீர் கால்வாய்கள், நீர்நிலைகளில் குப்பை கொட்டுவோருக்கும் தனியார் மற்றும் பொது இடங்களில் திடக்கழிவுகளை எரிப்போருக்கும் அபராத தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மரக்கழிவுகளை கொட்டினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படவுள்ளது. இதுதவிர மீன் வளர்ப்பு, இறைச்சிச் கழிவுகளை தரம் பிரிக்காமல் கொடுப்பவர்களுக்கு ரூ.5,000, கடை வியாபாரிகள், விற்பனையாளர்கள் முறையாக குப்பைத் தொட்டி வைக்கவில்லை என்றால் ரூ.1,000, குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.

பொது நிகழ்ச்சிகள் நடந்த இடங்களில் 12 மணி நேரத்துக்குள் தூய்மைப்படுத்தப்படாமல் இருந்தால் ரூ.5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தங்களது வீடுகள், கடைகளில் குப்பை சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளர்களிடம் குப்பையை முறையாக மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும்.

கட்டுமான கழிவுகளை அதற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும். இல்லையெனில் மாநகராட்சி ஊழியர்களால் அபராதம் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அபராதத்தை ஸ்பாட் பைன் முறையில் வசூலிக்க சென்னை மாநகராட்சி சார்பில் சோதனை முயற்சி தொடங்கப்பட்டது. சோதனை முயற்சி வெற்றி பெற்ற நிலையில், அதை விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டட கழிவுகளை கொட்டும் நபர்களுக்கு அபராதம் விதிக்க டிஜிட்டல் கருவிகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது, பொதுவெளியில் குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடியாக ஆன் ஸ்பாட் அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டது.  இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: போக்குவரத்து காவலர்கள் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க பயன்படுத்தும் டிஜிட்டல் கருவி போன்ற 500 புதிய டிஜிட்டல் கருவியை சென்னை மாநகராட்சி வாங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதற்காக இந்தியன் ஒவர்சீஸ் பாங்க்கிலிருந்து 468 பிஓஎஸ் சாதனங்களைப் பெற்றுள்ளது.

இதில் 70 ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு உள்ளது. செயல்படுத்தப்பட்ட சில நாட்களில் 289 பரிவர்த்தனைகளில் 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்காக யுபிஐ, டெபிட்/கிரெடிட் கார்டுகள், டிமாண்ட் டிராப்ட்கள் அல்லது காசோலைகள் மூலம் பணம் செலுத்தலாம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து சென்னை மாநகராட்சியானது சாதனங்களை வாடகைக்கு எடுத்துள்ளது. இதனால் பைன் நேரடியாக மாநகராட்சிக்கு செல்லும். அதிகாரிகள் பணம் சுருட்ட வாய்ப்பு இல்லை. மாநகராட்சி வருவாயும் உயரும்.

மாநகராட்சி பாதுகாப்பு மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள், மண்டல அதிகாரிகள், நிர்வாக மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சியில் உள்ள வார்டு உதவி பொறியாளர்கள் இந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவார்கள். இது சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் விதிகளை மீறுபவர்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்படும். இதற்காக 15 பறக்கும் படை வாகனங்கள் களமிறக்கப்படும்.
இதற்கு முன் சலான்கள் வழங்கப்பட்ட பிறகு பரிவர்த்தனைகளை முடித்து டேட்டாவை அப்லோட் செய்ய ஓரிரு நாட்கள் ஆகும்.

ஆனால் பிஓஎஸ் சாதனங்கள் மூலம் நிகழ்நேர பரிவர்த்தனைகளை உடனுக்குடன் அப்லோட் செய்ய முடியும். சாலையில் குப்பைகளை கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளை சாலையில் விடுவது ஆகியவற்றிற்கு ஸ்பாட் பைன் போடப்படும். இதுவரை சலான் மூலம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அடுத்த 2 நாட்களில் கருவி மூலம் ஃபைன் விதிக்கப்படும் முறை செயல்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like