1. Home
  2. தமிழ்நாடு

ஆன்மீகம் அறிவோம் : திருப்பதியில் எந்த நாளில் சென்று வழிபட்டால் வேண்டுதல்கள் நிறைவேறும் ?

1

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 60,000 முதல் ஒரு லட்சம் வரையிலான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் வரும் என சொல்லப்படுவதால் ஏழை, பணக்காரர் என பாகுபாடு இன்றி பல ஆயிரம் பக்தர்கள் திருப்பதி மலை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.

திருப்பதியை பொருத்த வரை முக்கிய நேர்த்திக்கடனே மொட்டை போடுவது தான். அதற்கு அடுத்த படியாக துலாபாரம் செலுத்துவது. துலாபார காணிக்கையாக வெல்லம், வாழைப்பழம், அன்னாசி என பல பொருட்கள் கொடுக்கலாம் என்றாலும், எடைக்கு எடை சில்லரை காசுகளை காணிக்கையாக தருவது பல காலமாக வழக்கத்தில் உள்ளது.

திருப்பதியில் அனைத்து நாட்களும் சென்று வழிபடலாம் என்றாலும், திருப்பதி சென்றால் ஒரு நாள் இரவாவது அங்கு தங்க வேண்டும் என்பது ஐதீகம். இப்படி தங்கி வழிபட்டு வருவது விசேஷம், இதுவே வழிபாட்டின் முழு பலனை கொடுக்கும் என சொல்லப்படுகிறது. மற்ற கோவில்களைப் போல் பக்தர்கள் நேரடியாக வந்ததும் சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்லலாம் என்று இல்லாமல் திருப்பதியில் பல மணி நேரம் காத்திருந்து, காத்திருக்கும் அறைகளில் 24 முதல் 48 மணி நேரம் வரை கூட காத்திருக்க வைக்கப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.

திருப்பதி மலை என்பது சந்திரனின் ஆற்றல் அதிகம் நிறைந்த பகுதியாகும். அதாவது திருமலை சந்திரகாந்த கல் எனப்படும் சந்திர சக்தி நிறைந்த கற்களால் ஆன மலையாகும். அதனால் தான் திருப்பதி சந்திரனுக்குரிய பரிகார தலமாக உள்ளது. ஜோதிட ரீதியாக சந்திர பகவான் மனோகாரகன் என அழைக்கப்படுகிறார். நமது மனநிலை தெளிவாக இருந்தால் மட்டுமே நாம் செய்யும் செயல்கள், எடுக்கும் முடிவுகள் தெளிவானதாக இருக்கும். அப்படி தெளிவான மனநிலையில் எடுக்கப்படும் முடிவுகள், வெற்றிகளையே தரும். திருப்பதி சென்று வந்தால் ஒருவரின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்பதற்கு இதுவே காரணம்.

திருப்பதி பெருமாளை சனிக்கிழமையில் சென்று தரிசிப்பது சிறப்பு என்பார்கள். சனிக்கிழமையில் பெருமாளை வழிபடுவது மற்ற கோவில்களுக்கு சொல்லப்படும் பொதுவான நியதி. ஆனால் திருப்பதியை பொருத்தவரை ரோகிணி, திரிவோணம், அஸ்தம் போன்ற சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த நட்சத்திரங்கள் வரக் கூடிய நாட்கள் மற்றும் முழு பெளர்ணமி நாளிலேயே வழிபடுவது மிகவும் சிறப்பானது. சந்திர ஆதிக்கம் பெற்ற நட்சத்திரங்கள், சந்திர பலம் நிறைந்த நாட்களில் திருப்பதி பெருமாளை சென்று தரிசித்தால், நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும்.

Trending News

Latest News

You May Like