ஆன்மீகம் அறிவோம் : சீரடி சாய்பாபாவிற்கு எப்படி விரதம் இருக்க வேண்டும்?

ஷீரடி சாய்பாபாவுக்கு உகந்த வழிபாட்டு நாளாக வியாழக்கிழமை கருதப்படுகிறது. இந்த நாளில் அதிகமான பக்தர்கள் விரதம் இருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த விரதம், பக்தர்களின் மன விருப்பங்களை நிறைவேற்றும் சக்தி கொண்டது என நம்பப்படுகிறது. அதோடு வியாழக்கிழமையில் விரதம் இருந்து சாய்பாபாவை வழிபட்டால் அவரே குருவாகவும் இருந்து நம்மை சரியான பாதையில் வழிநடத்துவார் என்றும் பக்தர்களால் ஆழமாக நம்பப்படுகிறது. வியாழக்கிழமையில் எப்படி விரதம் இருந்தால் சாய்பாபாவின் அருளால் நினைத்தது நிறைவேறும் என தெரிந்து கொள்ளலாம்.
தொடர்ந்து ஒன்பது வியாழக்கிழமையில் நம்பிக்கையுடன் விரதம் இருக்க வேண்டும். முழுமையான, திடமான நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும். இந்த விரதம் தோன்றியதற்கு கதை ஒன்றும் சொல்லப்படுகிறது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் மற்றும் கோகிலா தம்பதியினரின் கதை இது. மகேஷின் முரட்டுத்தனமான குணத்தால் அவர்களது குடும்பத்தில் அமைதி குலைந்து, தொழிலிலும் நஷ்டங்கள் ஏற்பட்டன. இந்நிலையில், ஒரு ஞானியின் அருளால், கோகிலா இந்த ஒன்பது வார வியாழக்கிழமை விரதத்தை மேற்கொள்ளத் தொடங்கினார். விரதத்தின் பலனாக, மகேஷின் சுபாவத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. அவரது தொழில் செழித்தது, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க துவங்கியது. கோகிலா இந்த அனுபவத்தைச் தனது சூரத்தைச் சேர்ந்த உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டாள். அவளின் உறவினர்களும் இந்த விரதத்தின் மகிமையை உணர்ந்து, இதை கடைபிடிக்க துவங்கினர். அவர்களது குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கினர். இவ்வாறாக, இந்த விரதத்தின் மகத்துவம் பலருக்கும் பரவியது.
இந்த விரதத்தை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையானவை. அதாவது, வியாழக்கிழமைகளில் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட வேண்டும். பழங்கள், பால் மற்றும் நீர் ஆகாரங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். சாய்பாபாவின் திருவுருவப் படத்தை மஞ்சள் நிறத் துணியின் மீது வைத்து, சந்தனம், மஞ்சள் பூசி, மஞ்சள் மலர்களால் அலங்கரித்து, விளக்கேற்றி, ஊதுபத்தி ஏற்றி, ஆரத்தி செய்ய வேண்டும். பாபாவின் மூல மந்திரத்தை உச்சரிப்பது சிறந்தது. ஆண், பெண் இருபாலரும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். காலை மற்றும் மாலை வேளைகளில் பாபா கோயிலுக்குச் சென்று தரிசிப்பது கூடுதல் சிறப்பு. மாதவிடாய் காலங்களில் அல்லது உடல்நலக் குறைபாடுகள் இருந்தால், ஒரு வார விரதத்தைத் தவிர்த்து, அடுத்த வாரம் மீண்டும் தொடரலாம். ஒன்பதாவது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யும்போது, ஐந்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அது சாத்தியமில்லையென்றால், சாய்பாபா கோயிலில் அன்னதானத்திற்காகப் பணம் வழங்குவது உகந்தது.
உறுதியான நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் இந்த விரதத்தை அனுசரிக்கும் பக்தர்களுக்கு, பாபாவின் அருளால் அனைத்து விருப்பங்களும் கைகூடும் என நம்பப்படுகிறது. நாள் முழுவதும் பாபாவுடன் இணைந்திருக்கும் ஓர் உணர்வை இந்த விரதம் தருவதாகப் பல பக்தர்கள் கூறுகின்றனர். முழுமையான பக்தியும் நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே பாபாவின் அன்பைப் பெற முடியும் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம். கலியுகத்தில் பக்தர்கள் படும் துன்பங்களில் இருந்து அவர்களை மீட்கும் மிகவும் சக்தி வாய்ந்த, அற்புதமான விரதமாக இந்த வியாழக்கிழமை விரதம் கருதப்படுகிறது.