தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள்..!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர் தலைமையில் பட்டா முகாம்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், அங்கு, வீட்டுமனை பட்டாக்கள், பட்டா மாறுதல் ஆணைகள் பெற தகுதியான பயனாளிகளுக்கு முறைப்படி பட்டா வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
மேலும், பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களை பெற்று அவற்றை இணையவழியில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், பல்வேறு வருவாய்த்துறை ஆவணங்களில் பிழை திருத்தம் செய்வது தொடர்பான மனுக்களையும் பெற்றுக் கொண்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, வருவாய்த்துறை சார்பில் பெறப்படும் மனுக்களை ஒரு வாரத்திற்குள் தீர்வு காண வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.