பேச்சாளர் மகாவிஷ்ணு கைது..! செப்.20 வரை சிறையில் அடைக்க உத்தரவு..!
சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளி, சைதாப்பேட்டை மாந்தோப்பு மாடல் பள்ளிகளில் தன்னம்பிக்கை விழிப்புணர்வு என்ற பெயரில் பேசவந்த பரம்பொருள் பவுண்டேஷன் நிறுவனரான மகாவிஷ்ணு, மூடநம்பிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சமூக ஊடகத்தளங்களில் கண்டனங்கள் பெருகின.
இந்நிலையில், காணொளிப் பதிவு ஒன்றை மகாவிஷ்ணு வெளியிட்டுள்ளார். அதில், “நான் எங்கும் தப்பி ஓடி ஒளியவில்லை. ஓடி ஒளியும் அளவுக்கு நான் என்ன கருத்துகள் கூறிவிட்டேன்.
எனது ஆஸ்திரேலியா பயணம் திட்டமிட்ட பயணம். 8 நாள்களுக்கு முன்னதாகவே ஆஸ்திரேலியா வந்துவிட்டேன். சனிக்கிழமை சென்னை வருவேன்,” என அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சனிக்கிழமை காலை சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு: இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணு மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 192, 196 (1) a, 352, 353 (2) மற்றும் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்பிரிவு 92 (a) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் மகாவிஷ்ணுவை வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சைதாப்பேட்டை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.