SPB மனைவி, மகள், சகோதரி மருத்துவமனை வந்தனர்! உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைக்காத சோகம்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கடந்த மாதம் 5ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளன என்றும் விரைவில் குணமாகி வீடு திரும்பி விடுவேன் என்றும் வீடியோவில் பேசி இருந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 13ம் தேதி உடல்நிலை மோசம் அடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை பெற்றும் சிகிச்சை அளித்தனர்.
நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர் குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்தனர். அதன்பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் விழிப்புடன் இருக்கிறார் என்றும் பேசுவதை புரிந்து கொள்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
51 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை மீண்டும் நேற்று மாலை திடீரென்று மோசம் அடைந்துள்ளது. நேற்று இரவு 9.30 மணி வரையில் எஸ்.பி.பி மகன் சரண் மருத்துவமனையில் இருந்து விட்டு வீட்டிற்கு புறப்பட்ட நிலையில், எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாமல் மிகவும் அபாய கட்டத்திலேயே இருக்கிறார்.
மருத்துவர்களின் தொடர் முயற்சிகளுக்கும், சிகிச்சைக்கும் எஸ்.பி.பி.யின் உடல்நிலை ஒத்துழைக்க மறுக்கிறது என்கிற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதையடுத்து எஸ்.பி.பி.யின் மனைவி சாவித்திரி, மகள் பல்லவி, மகன் சரண், சகோதரி சைலஜா ஆகியோர் மருத்துவமனையில் சோகத்துடன் உள்ளனர். இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் தனது ஆரூயிர் நண்பன் மீண்டெழுவார் என்கிற நம்பிக்கையில் காத்திருக்கிறார்.
எழுந்து வாங்க எஸ்.பி.பி... இன்னும் ஆயிரம் பாடல்கள் உங்கள் குரலுக்காக காத்திருக்கு!