தெற்கு ரயில்வே புதிய முயற்சி! இனி ரயில் பெட்டிகளிலேயே தங்கலாம்..!

தமிழ்நாட்டின் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்று ராமேஸ்வரம். இங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகை தருகின்றனர். ஆகையால் அவர்களை ஈர்க்கும் வகையில் தெற்கு ரயில்வே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் ஒன்று தான், ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளையே தங்கும் அறைகளாக மாற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரயில் போக்குவரத்திற்கு பயன்படாத 5 ரயில் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
ரயில் பெட்டிகளின் உட்புறத்தில் உரிய மாற்றங்கள் செய்து தங்கும் அறைகளாக்கும் பணி தேர்ந்தெடுக்கப்படும் ஒப்பந்ததாரரின் கடமையாகும். பின்பு அவற்றை பயணிகளின் பயன்பாட்டிற்கு அனுமதித்து வரையறுக்கப்பட்ட கட்டணத்தை வசூலித்துக் கொள்ள வேண்டும். இந்த 5 ஆண்டு கால ஒப்பந்த பணிக்கு ஒப்பந்ததாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
இந்த மின்னணு ஒப்பந்தம் பற்றிய மேல் விவரங்களுக்கு www.ireps.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம் அல்லது 9003862967 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மின்னணு ஒப்பந்தங்கள் ஜூலை 15 மதியம் 12 மணிக்குள் இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெற்கு ரயில்வே டெண்டர் கோரி உள்ளது.
இது போல் புதுமையான நடவடிக்கைகளின் மூலம் தமிழ்நாடு மட்டுமன்றி வட மாநில சுற்றுலா பயணிகளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பெருமளவில் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலாவாக வருவதற்கு வாய்ப்பு ஏற்படும் என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ராமேஸ்வரம் பாம்பனில் ரயில்வே வாரியத்தின் முயற்சியால் அமைக்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட புதிய தூக்குப் பாலம் சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.