தென்சென்னை தி.மு.க. வேட்பாளருக்கு ஆப்பிள், டைரி மில்க் சாக்லெட் மாலை..!
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில், தென்சென்னை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சோழிங்கநல்லூர் தொகுதியில் மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையை ஈடுபட்டார். அவரை ஆதரித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்த் ரமேஷ் உள்ளிட்டோர் வாகனத்தில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ஓ.எம்.ஆர். சாலை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆப்பிள் மாலை, டைரி மில்க் மற்றும் பை ஸ்டார் சாக்லெட் மாலை, ஆள் உயர ரோஜாப்பூ மாலை, கிரீடம் என வேட்பாளரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல் வேட்பாளர் வாகனம் செல்லும் சாலையின் ஒருபுறத்தில் ஆண்கள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முகம் பதிந்த மாஸ்க் அணிந்தும், மறுபுறத்தில் பெண்கள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முகம் பதிந்த மாஸ்க் அணிந்தும், கையில் வைத்திருந்த கருப்பு சிவப்பு பலூனை பறக்கவிட்டு வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் வேட்பாளர் செல்லும் வழியெங்கும் கருப்பு சிவப்பு வண்ணத்தில் பலூன், திமுக தோரணங்களை கட்டியும், மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர். இளைஞர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் முகம் பதிந்த மாஸ்க் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் சென்று வேட்பாளருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
#JUSTIN ஆப்பிள் மாலை, சாக்லேட் மாலை, அசோகச் சக்கர தூண் வழங்கி தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப் பாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு#DMK #MaSubramanian #ThamizhachiThangapandian #Electioncampaign #LokSabhaElections2024 #News18TamilNadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/ty6rZGCXoJ
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 7, 2024