சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து : 39 ரயில்களை ரத்து செய்த தென் மத்திய ரயில்வே துறை..!
தெலுங்கானா மாநிலம், பெத்தபல்லி மாவட்டம், பெத்தபல்லி - ராமகுண்டம் மார்கத்தில் ராகவபூர் அருகே நேற்று முன்தினம் இரவு இரும்புகளை ஏற்றி வந்த சரக்கு ரயில் 11 பெட்டிகளுடன் தரம் புரண்டது.
வேகமாக சென்ற சரக்கு ரயிலின் பெட்டிகளுக்கிடையே இருந்த லிங்க் அறுந்து போனதால் ஒன்றோடு ஒன்று மோதி பெட்டிகள் தடம் புரண்டன. இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் 3 டிராக்குகள் நாசமடைந்தன. இதனால் டெல்லி, சென்னைக்கு செல்லும் ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் உயிர் சேதங்கள் ஏதும் இல்லாவிட்டால் பொருட் சேதம் அதிகமாக உள்ளதாக ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.
தென் மத்திய ரயில்வே துறை பொது மேலாளர் அருண் குமார் ஜைன் சம்பவ இடத்திலிருந்து மீட்புப் பணிகளை பார்வையிட்டார். கவிழ்ந்த 11 பெட்டிகளை மீட்டெடுத்து, புதிய தண்டவாளங்களும் சம்பவ இடத்தில் பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
அதே சமயத்தில் அறுந்து விழுந்த எலக்ட்ரிக் கம்பிகள் பொருத்தும் பணியும் அதி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தை தொடர்ந்து, 39 ரயில்களை தென் மத்திய ரயில்வே துறை ரத்து செய்துள்ளது. மேலும் 53 ரயில்களை மாற்று பாதையில் செல்லவும், 7 ரயில்களை நேரம் மாற்றி அனுப்பவும் தென் மத்திய ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.
சரக்கு ரயில் தடம் புரண்ட காரணத்தினால், நர்சாபூர் - செகந்திராபாத், ஹைதராபாத் - சிர்பூர் காகஜ்நகர், செகந்திராபாத் -காகஜ்நகர் காஜிபேட்டா - சிர்ப்பூர் டவுன், சிர்ப்பூர் டவுன் - கரீம் நகர், கரீம்நகர் - போதன், பத்ராசலம் ரோட் - பலார்ஷா, யஷ்வந்த்பூர் - யூசஃப்பூர், காச்சிகூடா - கரீம் நகர், செகந்திராபாத் - ராமேஸ்வரம், செகந்திராபாத் - திருப்பதி, ஆதிலாபாத் -நாந்தேட், நிஜாமாபாத் - காச்சிகூடா, குந்தக்கல்லு - போதன் ஆகிய 39 ரயில்களை தென் மத்திய ரயில்வே துறை ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.