சளி,இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் - சௌமியா சுவாமிநாதன்..!

உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானியும், எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் தலைவருமான டாக்டர் சௌமியா சுவாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- “காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகள் அதிகமான வெப்பத்தால் பாதிக்கக்கூடிய சூழல் உள்ளது. நமது கடற்கரையோர பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதுடன் மக்கள் தொகை நெருக்கமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நமது சுகாதாரம் பாதிக்கும் நிலை உள்ளது. இப்போது நமது ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் கடலோரப் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் எப்போது அதிகரிக்கிறது. வெப்ப அலைகளில் இருந்து என்னென்ன பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படுகிறது அவற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.
அதன்படி ஏஐ தொய்நுட்ப உதவியுடன் வெப்ப அலைகள் துவங்கும்போது பொதுமக்கள் தங்களை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை வழங்குவது குறித்தும் ஆராய்ச்சிகள் நடைபெற உள்ளது. ஏற்கனவே நமது நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மீனவ நண்பன் செயலி மூலம் இப்பகுதியைச் சார்ந்த சுமார் ஒன்றரை லட்சம் மீனவர்கள் பல்வேறு தகவல்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். அதேபோல் மீனவர்கள் மற்றும் கடலோர பகுதி சார்ந்தவர்கள் பயன் பெறும் வகையில் அவர்களது உடல் நலம் சார்ந்து தகவல்களை அறிந்து கொள்வதற்கான புதிய செயலியை உருவாக்குவதற்கான முயற்சியை முன்னெடுக்க உள்ளோம்.
இதன் மூலம் மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதியைச் சார்ந்தவர்கள் தங்களது உடல் நலன் குறித்த அறிந்து கொள்ள முடியும். பொதுவாக மீனவர்கள் மற்றும் கடலோர கிராமங்களை சார்ந்தவர்களில் இருவரில் ஒருவருக்கு ரத்த அழுத்தம் பாதிப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது காலநிலை மாற்றம் மற்றும் வெப்ப அலைகள் காரணமாக இந்த பாதிப்பு அவர்களுக்கு உருவாகியுள்ளது. தற்போதைய சூழலில் இருவரில் ஒருவருக்கு இரத்த அழுத்தமும் மூவரில் ஒருவருக்கு சர்க்கரை நோயும் உள்ளது இது எவ்வித அறிகுறியையும் வெளியிடப்படுத்தாதது எனவே அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தம் குறித்து சோதனை செய்ய வேண்டும் அதற்கான மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது இதனை எளிமையாக சரி செய்து விடலாம்.
தற்போதைய சூழலில் நமது நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா தொற்று ஏற்கனவே வந்த ஒமிக்ரான் 2022 வகையை சார்ந்தது. அதில் சில உருமாற்றங்கள் பெற்று தற்பொழுது மீண்டும் பரவத் துவங்கியுள்ளது. இந்த கொரோனா கிருமி நம்மிடமே இருக்க துவங்கி விட்டது எங்கும் அழிந்து போகவில்லை. சில உருமாற்றங்களை பெற்று எட்டு மாதங்களுக்கு ஒரு முறை இது பரவத் துவங்கி வருகிறது. எப்படி நமக்கு சளி, இருமல், ஜுரம் போன்றவை வைரஸ்களால் உருவாகிறதோ அதேபோல் இந்த கொரோனாவும் ஒரு வைரஸ் ஆக பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு கூட்டமான இடங்களில் இருக்கும் பொழுதும் குளிரூட்டப்பட்ட அரங்கு, அறை, ரயில் வாகனம் போன்றவற்றில் பயணிக்கும் போதும் நாம் முகக் கவசம் அணிவது மிகவும் அவசியமானது. நமக்கு சளி,இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக நாம் முகக் கவசம் அணிவதன் மூலம் மற்றவர்களுக்கு இது பரவாமல் தடுக்க முடியும். சளி,இருமல் உள்ளிட்ட தொற்று ஏற்பட்டால் பொது இடங்களில் இரும்போதே தவிர்க்க வேண்டும் கண்ட இடங்களில் எச்சில் துப்புவது போன்ற செயல்களை முழுவதுமாக நிறுத்த வேண்டும். அதேபோல் வெளியிடங்களுக்கு சென்று வரும்போது கைகளை கிருமி நாசினி கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் இது போன்ற பழக்கங்களும் நம்மை பாதுகாக்கும்.
ஏற்கனவே மாரடைப்பு ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். தற்போது கொரோனா தொற்று பரவி வந்தாலும் அச்சப்படும் அளவிற்கு இல்லை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் சிறிய தாக்கத்தை தான் ஏற்படுத்தி வருகிறது. ஒரு சிலர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏற்கனவே நாம் தடுப்பூசி எடுத்துக் கொண்டதன் விளைவாக அந்த நோய் எதிர்ப்பு சக்தி தற்போது நம்மை காத்து வருகிறது.
தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது தடுப்பூசி போட்டதிலிருந்து இரண்டு மாதங்களுக்குள்ளாக ஏற்பட்டால்தான் அது பக்க விளைவு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படுவது பக்கவிளைவு அல்ல. ஆனால் கொரோனா பரவல் காரணமாக மார் அடைப்பு ஏற்பட்டும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று நமது உடலுக்குள் புகுந்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியதால் நிகழ்வுதானே தவிர தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவு அல்ல இது. நம் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் அனைத்துமே மிகவும் பாதுகாப்பானது.” என அவர் தெரிவித்தார்.