1. Home
  2. தமிழ்நாடு

சவுமியா அன்புமணி நீக்கம்; பாமக அதிரடி - 'பசுமைத் தாயகம்' புதிய தலைவராக ஸ்ரீகாந்தி நியமனம்!

சவுமியா அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் நிர்வாக மாற்றங்கள் குறித்து இந்த கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பாமகவின் முக்கிய துணை அமைப்பான 'பசுமைத் தாயகம்' அமைப்பின் தலைவராக நீண்டகாலமாக இருந்து வந்த சவுமியா அன்புமணி, தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ராமதாஸின் மூத்த மகளும் பாமகவின் செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி பசுமைத் தாயகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் மொத்தம் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுள் முக்கியமானவையாக பாமகவின் புதிய தலைவராக டாக்டர் ராமதாஸ் முறைப்படி நியமிக்கப்பட்டுள்ளார். ஜி.கே. மணி மீண்டும் கௌரவத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் புதிய பொதுச் செயலாளராக முரளி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்க ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமதாஸ்

பொதுக்குழுவில் பேசிய பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, தனது சகோதரர் அன்புமணி ராமதாஸை மிகக் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது, "அன்புமணிக்கு கிடைத்த எம்பி மற்றும் மத்திய அமைச்சர் பதவிகள் யாவும் மருத்துவர் ஐயா போட்ட பிச்சை. அவர் செய்தது பச்சைத் துரோகம். அதிகாரம் இருந்தால் அவர் தனியாகக் கட்சி தொடங்கிப் பார்க்கட்டும். பாமக எனும் கோட்டைக்கு ஐயா ஒருவரே ராஜா. இதில் யாரும் உரிமை கொண்டாட முடியாது. பாமக கொடியை இனி சவுமியா அன்புமணி பயன்படுத்தக் கூடாது. வரும் சட்டமன்றத் தேர்தலில் 25 எம்எல்ஏக்களுடன் நாம் சட்டமன்றத்திற்குச் செல்வோம், ஆட்சியில் பங்கு பெறுவோம். இனிமேல்தான் ஐயாவின் ஆட்டத்தைப் பார்க்கப் போகிறீர்கள்" என்றும் சூளுரைத்தார்.

முன்னதாக பேசிய டாக்டர் ராமதாஸ், "நான் என் பிள்ளையைச் சரியாக வளர்க்கவில்லை" என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார். அன்புமணியின் செயல்பாடுகள் தன்னை முதுகில் குத்துவது போல் இருப்பதாகவும், கட்சியின் வெற்றிக் கூட்டணி 2026-ல் அவருக்குப் பாடம் புகட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Trending News

Latest News

You May Like