மகன் செய்த தகராறு.. திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை !

திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியை அடுத்துள்ள மணவாளநல்லூரைச் சேர்ந்தவர் கணேசன்(48). திமுகவைச் சேர்ந்த இவர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார்.
அவர் குடியிருப்பு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் கழிவுநீர் சாக்கடை பிரச்சினை ஏற்பட்டது. அப்போத கணேசனின் மகன் பிரபாகரன், தம்பி ராமர் ஆகியோர் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், மகேந்திரன் ஆகிய இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கணேசன் நேற்று முன்தினம் இரவு எரவாஞ்சேரி கடைவீதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, 8 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது.
பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை சுற்றிவளைத்து அக்கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கணேசன் சரிந்துவிழுந்தார். பின்னர் அப்பகுதியில் மக்கள் திரண்டதால் அக்கும்பல் அவரை விட்டுவிட்டு தப்பியோடியது.
வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை அப்பகுதியினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கணேசன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை தேடி வந்த நிலையில், கணேசன் கொலை தொடர்பாக 4 பேர் லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
மேலும் சந்தோஷ், அபிஷேக், ராதாகிருஷ்ணன், மகேந்திரன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். மகன் மற்றும் சகோதரன் தகராறில் ஈடுபட்டதால் தந்தையான திமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in