மாநிலங்களவைக்கு சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/80f4559553526d406bbca462d9c6c811.png?width=836&height=470&resizemode=4)
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி (வயது 77), உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலிருந்து 1999-ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்.
அதேநேரம் இனிமேல் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில்லையென அவர் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின்போதே அறிவித்தார். எனவே அவரை மாநிலங்களவை மூலம் நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யக் காங்கிரஸ் முடிவு செய்திருந்தது.
இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சட்டசபை அலுவலகத்துக்குச் சென்ற சோனியா காந்தி, அங்குத் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். போட்டியின்றி சோனியா காந்தி மாநிலங்களவைக்கு தேர்வானதை சட்டமன்ற செயலகம் முறைப்படி அறிவித்தது.
ஏற்கனவே 5 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியா காந்தி முதல்முறையாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் ஏப்ரல் மாதத்துடன் 15 மாநிலங்களைச் சேர்ந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஓய்வுபெற இருக்கிறார்கள். புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.