தாயை அடித்த தந்தையை அடித்து கொன்ற மகன்!
டெல்லியின் ரோகிணி பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் குடிபோதையில் தினமும் மனைவி, குழந்தைகளுடன் சண்டை போட்டு வந்திருக்கிறார். அவர்களை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார். இதனால், குடும்பத்தில் சண்டை, சச்சரவு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், அமன் விகார் காவல் நிலையத்திற்கு இன்று காலை தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதில் பேசியவர், நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என போலீசிடம் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், கொலை செய்யப்பட்ட நபர், வழக்கம்போல் குடிபோதையில் குடும்பத்தில் தகராறு செய்துள்ளார். அவருடைய மனைவியை அடித்து, தாக்கியுள்ளார்.
இதனை பார்த்த அவர்களுடைய 16 வயது மகன் ஆத்திரமடைந்து உள்ளான். பிளாஸ்டிக் குழாய் ஒன்றை எடுத்து தந்தையை கடுமையாக தாக்கி உள்ளான். இதில், அவர் மரணம் அடைந்து உள்ளார். அவருடைய உடலை கைப்பற்றிய போலீசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி அமன் விகார் காவல் நிலையத்தில், பாரதீய நியாய சன்ஹிதா சட்டத்துடன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.