ஓய்வூதிய பணத்திற்காக 3 மாதம் முன் இறந்த தாயின் சடலத்தை மறைத்து வைத்த மகன்..!

ஆந்திர எலூரின் தங்கெல்லாமுடி யாதவர் நகரைச் சேர்ந்த சரணாரத்தி நாகலட்சுமி (77) என்பவர் குடும்பத்தோடு வசித்து வந்தார். வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறக்கவே, இவர் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். மேல் வீட்டில் தாய் நாகலெட்சுமியும், கீழ் வீட்டில் மகன் துர்கா பசவ பிரசாத் மற்றும் அவரது மனைவி லலிதா தேவி ஆகியோர் வசித்து வந்துள்ளார்.
தாய் நாகலட்சுமிக்கு அவரது கணவர் இறந்த பின்னர் அதில் இருந்து ஓய்வூதியம் வந்துகொண்டிருந்தது. இந்த பணத்தை அவ்வப்போது, அவரது மகன் வாங்கி தனது செலவுக்கு பயன்படுத்தி வந்ததாக கூறபடுகிறது. இந்த சூழலில் திடீரென நாகலட்சுமி வீட்டை விட்டு பல நாட்களாக வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர், மகனிடம் இதுகுறித்து விசாரித்துள்ளனர். ஒவ்வொரு முறையும் விசாரிக்கும்போது, வெளியே சென்றுள்ளதாகவும், வெளியூர் சென்றுள்ளதாகவும், தூங்கி கொண்டிருப்பதாகவும் கூறி சமாளித்து வந்துள்ளார்.
இந்த சமயத்தில் இவரது வீட்டின் அருகே இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை அருகில் இருந்தவர்கள் கேட்கவே, எலி, பூனை இறந்த கிடந்ததால் இந்த துர்நாற்றம் வந்ததாக கூறி வந்துள்ளார். இருப்பினும் அந்த வாடை போகவே இல்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து வீட்டை சோதனை செய்தனர். அப்போது வீட்டினுள் மூதாட்டி நாகலட்சுமி அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ந்த போலீசார் உடனடியாக சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி அவரது மகனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓய்வூதியம் பெற தனது தாயின் சடலத்தை மறைத்தாரா, அல்லது இது கொலையா, அல்லது இயற்கை மரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகலட்சுமி இறந்து சுமார் 3 மாத காலமாவது இருக்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே தெரியவரும் என போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.