எம்பி என்றால் என்னவென்று யாராவது விஜயிடம் சொல்லுங்கள் - அண்ணாமலை விமர்சனம்..!

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு குறித்து அக்கட்சி தலைவர் விஜய் 5 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள்தொகை வளர்ச்சியை திறம்படக் கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு மற்றும் இதர தென்மாநிலங்களுக்கு இது பெரும் தண்டனை என்று குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பை மத்திய அரசு தன்னிச்சையாக முன்னெடுப்பது, தென்மாநிலங்களின் அரசியல் முக்கியத்துவத்தை முற்றிலும் அழிப்பதற்கான முயற்சி என்றும், நாடாளுமன்றத்தில் அலங்கார பொம்மைகளாக இருப்பதில் என்ன பயன் எனவும் விஜய் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தநிலையில் விஜயின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எந்த மாநிலத்திலும் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என்றார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “நாடாளுமன்றத்தில் அனைவரும் பொம்மைகள் போல் அமர்ந்திருக்கிறார்கள் எதற்காக எம்பி என கேட்டிருக்கிறார். யாராவது விஜய்யிடம் எம்பி என்றால் என்ன என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்” என சொன்ன அவர், எதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
"தமிழ்நாட்டில் மே 2026 இல் புதிய ஆட்சி வரும்போது புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தில் அமமுக சார்பாக பங்கேற்றவர்கள், 'அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசவில்லை. பின்னர் எதற்கு இந்த கூட்டம்?' என கேள்வி எழுப்பி உள்ளனர்.
முதல்வரின் செயல்பாடுகள் நக்சலைட்டுகள்போல தான் உள்ளது. பொறுப்பான முறையில் செயல்படவில்லை. அவர், மத்திய அரசின் மீது நக்சல்கள் கிளர்ச்சி ஏற்படுத்துவதுபோல செயல்பட்டு கொண்டு இருக்கிறார். தமிழகத்தில் எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. அதை எல்லாம் விட்டுவிட்டு சம்பந்தமே இல்லாமல் பேசி வருகிறார்.
NCRD 2022 Data -வை பொறுத்தவரை 8.1 சதவிகிதம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இது 2021 ஐ ஒப்பிடும்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு சான்றாக உள்ளது. எங்களை பொறுத்தவரை அதிமுகவுடன் நாங்கள் மறைமுகமாக பேசவில்லை. அதிமுக இப்போது எதிர்க்கட்சியாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஓட்டுகளை சிந்தாமல் சிதறாமல் வைக்க வேண்டும் என பேசி வருகிறார்.
நேரமும், காலமும் வரும்போது இதுகுறித்து நாங்கள் பேசுவோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த தலைவர்கள் இருப்பார்கள்? என்பது குறித்து தேர்தல் நெருங்கும்போது முடிவு எடுக்கப்படும். நாடாளுமன்றத்தில் தமிழர் வரலாற்று சிறப்பான செங்கோல் நிறுவியபோது திமுக நாடாளுமன்றத்தில் நுழையகூட இல்லை. ஏன் இவ்வாறு எதிர்ப்பாக உள்ளனர்? முதல்வருக்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்தார். சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு பிரதமர் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தார். ஆனால் அவற்றை எல்லாம் முதல்வர் ஏன் கண்டுகொள்ளவில்லை?
தமிழ்நாடு முதல்வர் பிரதமரின் திட்டங்களை காப்பி அடித்து தனது திட்டமாக செயல்படுத்தி வருகிறார். மத்திய அரசு தமிழில் பெயர் வைத்து வந்துள்ள செல்வமகள் சேமிப்பு திட்டம், விவசாயிகள் கடன் உரிமைத் திட்டம் ஆகியவற்றை தமிழ்நாடு முதல்வர் ஏன் பிரபலப்படுத்தவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கூட இவ்வாறுதான் செய்தார்கள்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் அழைக்கப்பட்ட திமுக, திக உட்பட 45 கட்சிகளுக்கும் பாஜக கடிதம் எழுத உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அவர்களது சந்தேகங்களுக்கு அனைத்து கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர்கள் விளக்கம் கொடுக்க உள்ளனர். அவர்களுக்கு உண்மையில் ஏதாவது குழப்பம் இருக்கிறதா? என அவர்களின் சந்தேகங்களை தீர்க்க உள்ளோம். ஒவ்வொரு கட்சிக்கும் கடிதம் எழுத உள்ளோம். திராவிடர் கழகமாக இருந்தாலும் அவர்களை நேரில் சந்தித்து இதுகுறித்து விளக்க உள்ளோம்.
கமல் ராஜ்ய சபா சீட்டை உறுதி செய்துவிட்டார். அவருக்கு பாஜக சார்பில் வாழ்த்துகள். என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.