வயிற்றெரிச்சல் பிடித்த சிலர் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தை குறை சொல்கின்றனர் - அமைச்சர் உதயநிதி..!
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் மறைமலை நகர் நகர திமுக செயலாளர் – நகர்மன்றத் தலைவர் ஜெ.சண்முகம் மகன் கிஷோர்குமார் – மோனிஷா ஆகியோரின் திருமண விழா மறைமலை நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதன்பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- மாணவர்களை சுயமாக சிந்திக்க தூண்டும் கல்விமுறைதான் சிறந்த கல்விமுறை. அந்த வகையில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் கல்வி முறைதான் சிந்திக்க வைக்கின்றன. ஏன், எதற்கு என பகுத்தறிவுடன் கேள்வி கேட்கின்ற கல்வி முறை தமிழ்நாட்டில் உள்ளது. தமிழ்நாட்டின் கல்விமுறையை யாரும் குறை சொல்வதை ஏற்க முடியாது. அப்படி குறை சொன்னால் அது நம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அவமதிப்பதற்கு சமம்.
தமிழ்நாடு பாடத்தை பயின்றுதான் மயில்சாமி அண்ணாதுரையும், வீரமுத்துவேலும் இஸ்ரோ விஞ்ஞானிகளாக ஆகியுள்ளனர். உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்களே, இதை பொருத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல் பிடித்த சிலர், தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தை குறை சொல்கின்றனர். தமிழ்நாட்டின் பாடத்திட்டம் என்ன என்பது கவர்னருக்கு முழுமையாக தெரியுமா என்று தெரியவில்லை. இந்தியாவில் சிறந்த கல்வி முறை ஒன்று இருக்கிறது என்றால் அது கலைஞர் தந்த கல்வி முறைதான் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.