1. Home
  2. தமிழ்நாடு

கோவை பற்றி நீங்கள் அறிந்திராத சில முக்கிய தகவல்கள்..!

1

சிந்துவெளி எழுத்து சான்றுகள் தமிழகத்தில் 3 இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒன்று கோவை மாவட்டத்தின் சூலூர் என்பது உங்களுக்கு தெரியுமா?

கோவை நகரை சுற்றி 5 அல்ல 10 அல்ல, மொத்தம் 18 குளங்கள் உள்ளது. இதில் மிக பெரியது எது என்பது தெரியுமா? உக்கடம் பெரியகுளம் தான். இதை 8ஆம் நூற்றாண்டில் சோழர்கள் உருவாக்கியதாக தகவல் உள்ளது.

கோவையின் மிக பழமையான பள்ளி எது தெரியுமா?  மரக்கடை சந்திப்பில் உள்ள CSI எலிமெண்டரி பள்ளி தான் அது. லண்டன் மிஷன் சொசைட்டியை சேர்ந்த திரு.W.B. ஆடிஸ் என்பவர் ஆகஸ்ட் 1831ல் இந்த பள்ளியை துவங்கினார். இவர் பெயரில் ஆடிஸ் வீதி என ஒரு வீதி உப்பிலிபாளையம் சந்திப்பில் உள்ளது என கருதப்படுகிறது.

'மகாஜன நேசன்' எனும் வார இதழ் பற்றி கேள்வி பட்டிருக்கின்றீர்களா? கோவையில் முதல் முறை தமிழ், ஆங்கிலம் என இருமொழியில் வெளிவந்த இதழ் இது தான். இதை நடத்தியவர் திரு.சாமிக்கண்ணு வின்சென்ட். தென்னிந்தியாவின் முதல் நிரந்தர சினிமா தியேட்டரை கோவையில் கட்டியவரும் திரு.சாமிக்கண்ணு வின்சென்ட் தான். 1914 கட்டப்பட்ட 'வெரைடி ஹால் தியேட்டர்' தான் அது. கோவைக்கு எத்தனையோ நண்மை செய்துள்ளார் இவர்.

கோவையில் உள்ள கலைஞரின் 'குருவிக்கூடு' பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? கலைஞர் கருணாநிதி திரைப்படங்களுக்கு வசனம் எழுத ஆரம்பித்த காலத்தில் 1945 ஆண்டில் கோவை சிங்காநல்லூர் பகுதி, சுப்ரமணியன் பிள்ளை வீதியில் உள்ள ஒரு சாதாரண வீட்டில் மாத வாடகைக்கு வசிக்க துவங்கினார். 

அங்கிருந்து 'ராஜகுமாரி' எனும் திரைப்படத்துக்கு வசனம் எழுதினார். கோவையில் அப்போது செயல்பட்டு வந்த ஜூபிடர் பிக்ச்சர்ஸ் எனும் நிறுவனத்திற்காக இந்த பணியை அவர் செய்தார். இந்த படத்தில் தான் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார் 'புரட்சி தலைவர்' MGR. கோவையில் தான் வாழ்ந்த அந்த வீட்டை, தனது சுயசரிதையில் 'குருவிக்கூடு' என அவர் குறிப்பிட்டுள்ளார் என தகவல் உள்ளது.

இந்தியாவின் முதல் பாலிடெக்னிக் கல்லூரி உருவானது நம் கோவை மாநகரில் தான். இதன் பெயர் ஆர்தர் ஹோப் பாலிடெக்னிக் கல்லூரி.

பொறியியல் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க இது 1945ல் கோவை பீளமேடு பகுதியில் கட்டப்பட்டது. அப்போதைய மெட்ராஸ் கவர்னருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர் பெயர் இந்த கல்லூரிக்கு சூட்டப்பட்டது. பின் நாட்களில் இது தடாகம் சாலைக்கு மாற்றப்பட்டது. இதன் பெயர் GCT (Government College of Technology) எனவும் மாற்றம் செய்யப்பட்டது. 

கோவையில் 1958 ஆம் ஆண்டு 'திருவள்ளுவர் காவியம்' எனும் நூல் வெளிவந்தது. இதில் 4030 வெண்பாக்களால் திருவள்ளுவர் வரலாற்றை எழுதப்பட்டு வெளிவந்தது. இதை எழுதியவர்கோவையை சேர்ந்த A. கிருஷ்ணசாமி நாயுடு. இவர் கோவை பி.எஸ்.ஜி. சர்வஜனா பள்ளியில் தமிழ் ஆசிரியராக அப்போது பணிபுரிந்தவர்.

Trending News

Latest News

You May Like