சமூகநலத் துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் திடீர் ராஜினாமா..!

சமூகநலத் துறை அமைச்சர் ராஜ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
ராஜ்குமார் ஆனந்த் 2011 முதல் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் படேல் நகர் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குத் தேர்வானார்.
ராஜினாமா குறித்து அவர் கூறியதாவது:
"ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக ஆம் ஆத்மி தோன்றியது. ஆனால், இன்று ஆம் ஆத்மி கட்சியே ஊழலில் சிக்கியுள்ளது. இந்த அரசுடன் இணைந்து என்னால் பணியாற்ற முடியாது. என் பெயரை ஊழலுடன் தொடர்புப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.
அரசியல் மாற்றம் நிகழ்ந்தால், நாடு மாற்றம் அடையும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். ஆனால், அரசியல் மாறவில்லை, அரசியல்வாதிகள்தான் மாறியுள்ளார்கள்" என்றார் அவர்.
தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியை ஒழித்துக்கட்டுவதற்கான முயற்சியில் பாஜக இருப்பதாக தில்லி அமைச்சர் அடிஷி குற்றம்சாட்டினார். இந்தச் சூழலில்தான் ராஜ்குமார் அமைச்சர் பதவி மற்றும் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
கடந்தாண்டு நவம்பரில் வேறொரு பணமோசடி வழக்கில் ராஜ்குமார் ஆனந்த் இல்லத்தில் அமலாக்கத் துறையினர் சுமார் 23 மணி நேரம் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.