11 மணிக்கு குறுஞ்செய்தி கட்டாயம் : தமிழக பள்ளி தலையாசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு..!

தமிழகத்தில் ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் காலை மற்றும் அதிக உணவு வழங்கப்பட்டு வருகிறது இதன் வாயிலாக எண்ணற்ற மாணவர்கள் பசியின்றி கல்வி பயின்று வருகின்றனர். இந்த சத்துணவு திட்டத்தில் சத்துணவின் தரம் மற்றும் அளவு ஆகியவற்றை அவ்வபோது அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்த ஆய்வறிக்கையை பள்ளி தலைமை ஆசிரியர்கள் குறுஞ்செய்தி வாயிலாக மாவட்ட சமூக நலத்துறைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர் முறையாக இப்பணியை மேற்கொள்ளவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது.இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், "தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் மற்றும் அளவை உறுதி செய்ய ஏதுவாக தானியங்கி கண்காணிப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சத்துணவு குறித்த தகவல்கள் குறுஞ்செய்தியாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தினம் தோறும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமூக நலத்துறை ஆணையர் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அண்மையில் மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது பல்வேறு பள்ளிகளில் ஏஎம்எஸ் அமைப்பு மூலம் தினசரி சத்துணவு அறிக்கையை தலைமை ஆசிரியர்கள் முறையாக மாவட்ட சமூக நலத்துறைக்கு அனுப்பாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எனவே இதில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏஎம்எஸ் அமைப்பு மூலம் சத்துணவு அறிக்கையை குறுஞ்செய்தியாக தினமும் காலை 11 மணிக்குள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.